தமிழ்நாட்டை 3 மாநிலங்களாக பிரித்தால் ரூ.45,000 கோடி பெற்றுத் தருவோம் என பாஜக மாநிலத் துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் பேசியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
நாமக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”பாஜகவுக்கு வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் என்ற பாரபட்சம் பார்க்காமல், அனைத்து மாநிலங்களுக்கும் தேவையான நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்து வருகிறது. ஆனால், மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என தமிழ்நாடு அரசு கூறி வருகிறது. முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் இதுவரை நிதி ஆயோக் கூட்டத்தில் அவர் ஒருமுறை கூட கலந்து கொள்ளவில்லை. அதில் பங்கேற்றால் தான், தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை விளக்கி, நிதி ஒதுக்கீடு கேட்க முடியும். அப்போது தான், தமிழகத்திற்கு நிதி கிடைக்கும்.
தமிழ்நாட்டில் எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு நிதி கேட்கப்பட்டது? மத்திய பட்ஜெட்டில் எவ்வளவு கொடுக்கப்பட்டது? என்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். மக்களவைத் தேர்தலில், பாஜக தமிழ்நாட்டில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. அதற்காக நாங்கள் தமிழகத்தை புறக்கணிக்கவில்லையே. இப்போதும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை. தமிழ்நாட்டை 3 மாநிலங்களாக பிரித்தால், ஒரு மாநிலத்திற்கு ரூ.15 ஆயிரம் கோடி வீதம் 3 மாநிலங்களுக்கு ரூ.45 ஆயிரம் கோடி நிதியை பெற்று தருவோம்” என தெரிவித்துள்ளார்.
Read More : மேட்டூர் அணைக்கான நீர்வரத்து சரிந்ததால் நீர்திறப்பும் குறைப்பு..!!