குறுஞ்செய்தி மூலம் நடக்கும் மோசடிகளை தடுக்க இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) புது விதிமுறைகளை டிசம்பர் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு கொண்டு வரவுள்ளது.
நவீன டிஜிட்டல் யுகத்தில் ஒவ்வொரு நாளும் புதுப்புது வகைகளில் மோசடி நடந்து வருகிறது. அதாவது, பொதுமக்களின் செல்போனுக்கு வரும் ஓடிபி-ஐ பெற்று, அவர்களின் வங்கிக்கணக்கில் இருந்து பணத்தை எடுப்பது, லிங்கை அனுப்பி அதன் மூலம் தகவல்களை திருடி பணத்தை எடுப்பது போன்ற மோசடிகள் நடந்த வண்ணம் உள்ளன. இது குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், இந்த வகையான மோசடிகள் தொடர்ந்து நடைபெற்றுதான் வருகிறது.
இந்த நிலையில், இதனை கட்டுப்படுத்துவதற்கு இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) புது விதிமுறைகளை கொண்டுவந்துள்ளது. அதன்படி, டிசம்பர் 1 முதல் அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் வணிக செய்திகள் மற்றும் OTP (ஒன் டைம் பாஸ்வேர்ட்) செய்திகளை கண்காணிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஸ்பேம் எஸ்எம்எஸ் மற்றும் ஃபிஷிங் மோசடிகளை தடுக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஓடிபி கிடைப்பதில் தாமதம் ஏற்படாலம்.
டிசம்பர் 1 முதல் அனைத்து OTP களும் கண்காணிக்கப்படும். இதனால் OTP பெறுவதில் சிறிது தாமதம் ஏற்படலாம். போலி OTP களை பயன்படுத்தி மோசடி செய்வதை தடுக்க இந்த நடவடிக்கை உதவும். ஒவ்வொரு மெசேஜும் எங்கேயிருந்து வருகிறது என்ற மூலத்தையும் கண்காணிப்பதன் மூலம் பயனர்களின் பாதுகாப்பு அதிகரிக்கும். மேலும், ஜனவரி 1 முதல் 5G உள்கட்டமைப்பை விரைவாக உருவாக்க புதிய விதிகள் நடைமுறைக்கு வரும். தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பை அமைப்பதற்கான செலவுகள் தரநிலைப்படுத்தப்படும். இதனால் 5G சேவைகள் விரைவில் கிடைக்கும்.
TRAI-யின் இந்த புதிய நடவடிக்கைகள் தொலைத்தொடர்பு துறையை பாதுகாப்பானதாகவும், நவீனமாகவும் மாற்றும். பயனர்கள் இனி மோசடிகளுக்கு அஞ்சாமல் தொலைபேசிகளை பயன்படுத்தலாம். மேலும் 5G சேவைகளும் விரைவில் கிடைக்கும். முன்னதாக, ஆரம்பத்தில் அக்டோபர் 1க்கு இந்த விதிமுறைகளை அமல்படுத்தும் காலக்கெடு, நிர்ணயிக்கப்பட்டாலும், இந்த வழிமுறைகளை பின்பற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கான காலக்கெடு நவம்பர் 1 க்கு தள்ளிவைக்கப்பட்டது. இப்போது, அது டிசம்பர் 1 க்கு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.