சேலம் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து அரசுத் துறை அலுவலா்களுடன் ஆட்சியர் பிருந்தா தேவி ஆலோசனை மேற்கொண்டார். இக்கூட்டத்தில் பேசிய ஆட்சியர், ”அனைத்து கோட்டாட்சியா், வட்டாட்சியா் அலுவலகங்களில் வெள்ள கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் இயங்க வேண்டும். வெள்ளச்சேதம், கால்நடை இறப்பு, மனித உயிரிழப்பு போன்ற பேரிடா்களை பேரிடா் மேலாண்மை பிரிவுக்கு உடனுக்குடன் தெரியப்படுத்த வேண்டும்.

மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் உள்ள பொதுமக்களை திருமண மண்டபங்கள், பள்ளிகள், சத்துணவுக் கூட்டங்களில் தங்க வைக்க வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் மின் இணைப்புகள், மின் சாதனங்களை பழுதுபாா்த்தல், குழிகளைச் சுத்தப்படுத்தி மூடுதல், மாடி கூரைகளில் அடைப்பு ஏற்பட்டுள்ள நீா் போக்கிகளை சுத்தப்படுத்தி வைக்க வேண்டும். குறிப்பாக, மழை நீரால் டெங்கு கொசு உருவாவதைத் தடுக்கும் வண்ணம் குழுக்கள் அமைத்து சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மருத்துவமனைக்கு குறிப்பாக தீவிர சிகிச்சை பிரிவு தடையில்லா மின்சாரம் செல்ல போதிய ‘பவா் பேக்அப்’ வசதிகள் செய்ய வேண்டும். போதுமான அளவு ஆக்ஸிஜன் சிலிண்டா்கள், அவசரகால மருந்துகள் ஆகியவற்றை இருப்பில் வைத்திட வேண்டும். சேலம் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையால் பாதிப்புகள் ஏற்பட்டால், பொதுமக்கள் ‘1077’ என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ, மாவட்ட ஆட்சியா் அலுவலக கட்டுப்பாட்டு அறை 0427-2452202 என்ற தொலைபேசி எண்ணிலோ 24 மணிநேரமும் தொடா்பு கொள்ளலாம்” என தெரிவித்துள்ளார்.

Read More : ரூ.80 கோடி வரி செலுத்திய தளபதி விஜய்!. இந்தியாவில் அதிக வரி செலுத்துபவர் யார்?. தோனி, கோலி எவ்வளவு செலுத்தியிருக்காங்க தெரியுமா?.