எடப்பாடி அருகே அரசிராமணி பகுதியில் பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து டிராக்டரை சிறைபிடித்து பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்டம் அரசிராமணி பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் செயல்படுத்துவதற்கு பேரூராட்சிக்கு சொந்தமான இடமோ, போதிய இடவசதியோ இல்லாத காரணத்தால், தற்காலிகமாக குஞ்சாம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள மயானம் அருகே உள்ள காலியிடத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தினை செயல்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால், அரசிராமணி டவுன் பஞ்சாயத்தில் உள்ள குறுக்குப்பாறையூரில் மக்கள், விவசாயிகளை பாதிக்கும்படி, குப்பை கழிவை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில் அரசால் தேர்வு செய்யப்பட்ட இடம் என்பதால் குப்பைகளை பேரூராட்சி பணியாளர்கள் கொட்டிவந்தனர். ஆனால், நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் குப்பை நீர்நிலைகளில் கலக்கப்படுவதால் குடிநீரும், விவசாயமும் பாதிக்கப்படுகிறது என்று கூறி அப்பகுதியை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளனர். இருப்பினும், நேற்று பணியாளர்கள் குப்பைகளை கொட்ட முயன்றனர். அப்போது, டிராக்டை சிறைபிடித்த பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பேரூராட்சி மண்டல துணை இயக்குநர் குமார், பேரூராட்சி செயல் அலுவலர் தம்பி துரை மற்றும் சங்ககிரி காவல் ஆய்வாளர் ரமேஷ், தேவூர் எஸ் ஐ ராஜசேகரன் உள்ளிட்டோர் மக்களிடம் சமரசம் பேசி சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

Readmore: ”அந்த படத்த எடிட் பண்ணுனதே நான்தான்”..!! சங்ககிரி ராஜ்குமாருக்கு மிரட்டல் விடுக்கும் சீமான் தம்பிகள்..!!