நித்யானந்தா தனது சீடர்களுடன் சேர்ந்து பொலிவியாவில் சுமார் 4.8 லட்சம் ஹெக்டேர் நிலத்தை ஆக்கிரமித்துள்ள தகவல் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கைலாசா என்ற நாட்டை புதிதாக உருவாக்கியுள்ளதாக கூறி உலகையே திரும்பி பார்க்க வைத்தவர் நித்யானந்தா. தன்னை மதத் தலைவர் என்று அறிவித்துக் கொண்ட நித்யானந்தா, தற்போது மீண்டும் ஒரு பரபரப்பை கிளப்பி, அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். அதாவது, நித்யானந்தா இப்போது கைலாசாவின் எல்லைகளை விரிபடுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளாராம். இதற்காக, அவர் தென் அமெரிக்காவின் பொலிவியாவை குறிவைத்துள்ளார்.

நித்யானந்தா தனது சீடர்களுடன் சேர்ந்து பொலிவியாவில் சுமார் 4.8 லட்சம் ஹெக்டேர் நிலத்தை ஆக்கிரமித்துள்ளார். இந்தத் தகவலை அறிந்த இந்தியாவும், பொலிவியாவும் நடவடிக்கை எடுக்க தயாராகி வருகின்றன. தற்போதைய தகவலின்படி, நித்யானந்தாவும், அவரது சீடர்களும் பொலிவியாவில் வாழும் பழங்குடியினரை ஏமாற்றி நிலத்தை அபகரித்ததாக கூறப்படுகிறது. அந்த நிலத்தை வாங்கிய பிறகு, அதையும் கைலாசாவுடன் இணைத்து அறிவிக்க திட்டமிட்டிருந்தார். ஆனால், அதற்கு முன்பே நிலம் வாங்கிய விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.

நித்யானந்தா மற்றும் அவரது சீடர்கள் சேர்ந்து பொலிவியா நாட்டின் 4 லட்சத்து 80 ஆயிரம் ஹெக்டேர் அரசு நிலத்தை தங்கள் பெயர்களுக்கு மாற்றிக்கொண்டதாக சொல்லப்பட்டுள்ளது. மேலும், இந்த நிலம் 1000 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டு, நிலத்திற்கான குத்தகைத் தொகை ஆண்டுக்கு ரூ.8.96 லட்சமாகவும், மாதம் ரூ.74,667 ஆகவும், தினசரி தொகையாக ரூ.2,455 ஆகவும் முன்மொழியப்பட்டது. இதுகுறித்து பொலிவியாவின் வெளியுறவு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், ”பொலிவியா யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் கைலாசா என்று அழைக்கப்படும் ஒரு தேசத்துடன் எந்தவொரு உறவுகளையும் பேணவில்லை. ஏனென்றால், அவர்கள் ஒரு நாடாக அங்கீகரிக்கப்படவில்லை” என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிவியாவில் நிலத்தை அபகரிப்பதற்காக நித்தியின் சீடர்கள், பல மாதங்களாக அங்கேயே தங்கியிருந்துள்ளனர். ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்ட பிறகு, மக்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

இந்த தகவல் உள்ளூர் ஊடகங்களுக்கு தெரியவந்ததால், அவர்களை நித்தியானந்தாவின் சீடர்கள் மிரட்டியுள்ளனர். ஆனால், பொலிவியா அரசுக்கு நாலாபுறமும் வந்த அழுத்தங்கள் காரணமாக நித்யானந்தாவின் முழு ஒப்பந்தத்தையும் ரத்து செய்திருக்கிறது.

Read More : மச்சினிச்சி மீது வந்த விபரீத ஆசை..!! தடையாக இருந்த மனைவியை காரை ஏற்றிக் கொன்ற கணவன்..!! கடைசியில் நடந்த ட்விஸ்ட் சம்பவம்..!!