வியாடினா-19 என்ற நெல்லூரை சேர்ந்த பசு உலகின் விலையுயர்ந்த பசு என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளது. ரூ.40 கோடிக்கு இந்த பசு விற்பனையாகியுள்ளது
ஆந்திராவில் ஓங்கோல் மற்றும் நெல்லுரை சேர்ந்த சில வகை இன மாடுகள் உலக அளவில் பிரபலமாக உள்ளது. நெல்லூர் இன வகையான Viatina-19 என்ற இன பசு வெளிப்புறத் தோற்றத்தில் வெண்மை நிறத்தில் இருக்கும். இந்த வகை பசு பிரேசில் நாட்டில் நடந்த ஏலத்தில் ரூ.40 கோடிக்கு ஏலம் போனது. இதன் மூலம் உலகிலேயே அதிக விலைக்கு விற்கப்பட்ட கால்நடை என்ற சாதனையை இந்த மாடு படைத்துள்ளது. நெல்லூர் இன பசுக்கள் கடந்த 1868-ம் ஆண்டு பிரேசிலுக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு இந்த வகை பசுக்கள் அதிக அளவில் இனவிருத்தி செய்யப்பட்டு வருகிறது.
நெல்லூர் இனம் அதன் வலிமை மற்றும் புத்திசாலித்தனத்திற்கு பிரபலமானது. இந்தியாவில் தோன்றிய இந்த இனம் 1800 களில் பிரேசிலுக்கு கொண்டு வரப்பட்டது. பிரேசில் நாட்டில் 1.60 கோடி நெல்லூர் இன பசுக்கள் உள்ளன. இந்த வகை பசுக்கள் அதிக வெப்பத்தை தாங்கக் கூடியவை. எளிதில் நோய்கள் தாக்க முடியாத அளவுக்கு அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவையாகும். அதிக மற்றும் மிதவெப்ப மண்டல காலநிலைக்கு ஏற்றதாக தன்னை தகவமைத்து கொள்ளும். கடுமையான வெப்பம் மற்றும் வறண்ட நிலைமைகளுக்கு எதிர்ப்பு திறன் கொண்டவையாக இந்த கால் நடைகள் உள்ளது.
அது மட்டும் இல்லாமல் கடுமையான கால நிலையிலும் இனப்பெருக்கம் செய்யக்கூடியவை. அண்மையில் வியாடினா-19 நான்கு மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஏலத்தில் விற்கப்பட்டது. இது கின்னஸ் உலக சாதனையாக கருதப்படுகிறது. முந்தைய ஏலத்தில் விற்கப்பட்டதை விட, ஏறக்குறைய மூன்று மடங்கு அதிக விலையுடன் இந்த பசு தற்போது விற்கப்பட்டுள்ளது. இதன் விலை இந்திய மதிப்பில் சுமார் ரூ.40கோடி என கூறப்படுகிறது. தோராயமாக 1,100 கிலோகிராம் அல்லது 2,400 பவுண்டுகளுக்கு மேல் வியாடினா-19 எடை கொண்டது என தகவல்கள் தெரிவிக்கின்றன.