தேவூர் அருகே நல்லங்கியூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அலகுகள் குத்தியும், தீ மிதித்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
சேலம் மாவட்டம் தேவூர் அருகே நல்லங்கியூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் பொங்கல் விழா கடந்த 20ஆம் தேதி கம்பம் நடுதல் செய்து பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதையடுத்து, தினந்தோறும் சிறப்பு வழிபாட்டு பூஜை, சிறப்பு அலங்காரம், சன்னதியில் தண்ணீர் ஊற்றுதல், பச்சை பூஜை பூவோடு எடுத்தல் செய்து திரளான பக்தர்கள் விரதம் இருந்து வந்தனர். இதனையடுத்து, விழாவின் முக்கிய நிகழ்வாக பக்தர்கள் கல்வடங்கம் காவிரி ஆற்றங்கரைக்கு சென்று புனித நீராடி அம்மன் அலங்காரம் செய்து தீர்த்தக் குடம் எடுத்தும் பக்தர்கள் அலகுகள் குத்தியவாறு ஊர்வலமாக வந்தனர்.
கல்வடங்கம் அங்காளம்மன் கோவில் சன்னதியில் புறப்பட்டு கொட்டாயூர் வழியாக நல்லங்கியூர் முத்துமாரியம்மன் கோவில் சன்னதி வந்தடைந்தனர். பின்னர், கோவில் சன்னதி முன்பு அமைக்கப்பட்டுள்ள குண்டத்தில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தீ மிதித்தனர். பின்னர், வழிபட்டு பூஜை பொங்கல் வைத்தல், மாவிளக்கு தட்டம் எடுத்தல், கிடா வெட்டுதல் நடைபெற்றது. இதில் நல்லங்கியூர், வட்ராம்பாளையம், கொட்டாயூர், ரெட்டி பாளையம், மேட்டாங்காடு, சோழக்கவுண்டனூர், மேட்டுப்பாளையம், காவேரிப்பட்டி, வெள்ளாளபாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டனர்.