செந்தில் பாலாஜி, சேலம் ஆர்.ராஜேந்திரன் உட்பட 4 பேர் புதிய அமைச்சர்களாக இன்று பதவியேற்கவுள்ளனர்.
2021ல் முதல்வர் ஸ்டா லின் அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக செயல்பட்டு வந்த செந்தில் பாலாஜி அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்த போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி சட்ட விரோதமாக பணம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் திமுக ஆட்சியில் மின்சாரம் மற்றும் மதுவிலக்குத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார்.
பின்னர் 471 நாட்களாக சிறையில் இருந்த செந்தில் பாலாஜிக்கு செப்டம்பர் 26-ம் உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதனை அடுத்து அவர் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். மீண்டும் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கலாம் என்று அறிவிக்கப்பட்டதையடுத்து தமிழ்நாடு அமைச்சரவையில் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் கடிதத்திற்கு ஆளுநர் ஆர்என் ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து, உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். அதேபோல் செந்தில் பாலாஜி, கோவி செழியன், சேலம் ஆர் ராஜேந்திரன், ஆவடி நாசர் உள்ளிட்டவர்கள் புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்க உள்ளனர். பதவியேற்பு விழா மாலை 3.30 மணி அளவில் நடைபெறவுள்ளது.
1985 ஆம் ஆண்டு கட்சியின் தலைவர் மு. கருணாநிதியால் மாணவர் அணி மாவட்ட அமைப்பாளராக சேலம் ஆர்.ராஜேந்திரன் நியமிக்கப்பட்டார். பின்னர் படிப்படியாக உயர்ந்து, 2006 ஆம் ஆண்டு பனமரத்துப்பட்டி சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் , 2015 ஆம் ஆண்டில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மறைவுக்குப் பின் 2015 ஆம் ஆண்டு சேலம் (மத்திய) திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2016 இல் சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2021 இல் அவர் இரண்டாவது முறையாக சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் .சேலம் கல்லூரி மாணவராக திமுகவிற்குள் அடியெடுத்து வைத்த ராஜேந்திரன், பெரிய அளவில் சலசலப்புகளின்றி கட்சியை வழிநடத்திச் செல்லக்கூடியவர் என்று பெயரெடுத்தார். இந்நிலையில், தற்போது அமைச்சர் பதவி அவரை தேடி வந்துள்ளது.