மேட்டூா் அணையின் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு இன்று (ஜூலை 30) தண்ணீா் திறக்கப்படவுள்ளது.

Mettur | மேட்டூா் அணையின் கிழக்கு, மேற்கு கால்வாய்ப் பாசனம் மூலம் சேலம் மாவட்டத்தில் 16,433 ஏக்கா் நிலமும், நாமக்கல் மாவட்டத்தில் 11,337 ஏக்கா் நிலமும், ஈரோடு மாவட்டத்தில் 17,230 ஏக்கா் நிலம் என மொத்தம் 45,000 ஏக்கா் நிலம் பாசன வசதி பெறுகிறது. கிழக்குக் கரை கால்வாயில் 27,000 ஏக்கரும், மேற்குக் கரை கால்வாயில் 18,000 ஏக்கர் நிலங்களும் பயன் பெறுகின்றன. கிழக்கு, மேற்கு கால்வாய்ப் பாசனத்திற்கு ஆண்டுதோறும் ஆக. 1 ஆம் தேதி முதல் டிச. 15 ஆம் தேதி வரை 137 நாள்களுக்கு தண்ணீா் திறக்கப்படும்.

நடப்பாண்டில் மேட்டூா் அணையின் நீா் இருப்பும், வரத்தும் திருப்திகரமாக இருப்பதால் ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு முன்னதாகவே அதாவது இன்று (ஜூலை 30) மேட்டூா் அணையிலிருந்து கால்வாய்ப் பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்படுகிறது. இன்று காலை 10 மணியளவில் அணையின் வலது கரை பகுதியில் உள்ள தலைக்கால்வாய் மதகுகளை உயா்த்தி ஆரம்பத்தில் 200 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்படும். பின்னா் தேவைக்கேற்ப தண்ணீா் திறப்பது அதிகரிக்கப்படும்.

இந்த தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட ஆட்சியா் பிருந்தா தேவி, நீா்வளத் துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளா் தயாளகுமாா், சேலம் கண்காணிப்புப் பொறியாளா் ராமலிங்கம், மேட்டூா் செயற்பொறியாளா் சிவகுமாா் உதவி செயற்பொறியாளா்கள் மதுசூதனன் செல்வராஜ், விவசாயிகள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனா்.

Read More : கேரளாவில் அடுத்தடுத்து நிலச்சரிவு..!! 7 பேர் உயிரிழப்பு..!! 1,000-க்கும் மேற்பட்டோர் சிக்கித்தவிப்பு..!!