காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால், 43-வது முறையாக முழு கொள்ளளவை எட்டியது மேட்டூர் அணை.
மேட்டூர் அணை முழுவதும் நிரம்பிவிட்டதால், அணையின் பாதுகாப்புக் கருதி, 16 கண் மதகுகள் வழியாக, மேட்டூர் அணைக்கு வரும் நீர் முழுவதும் உபரி நீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. காவிரி டெல்டா பாசன விவசாயத்துக்காக வினாடிக்கு 46,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. வழக்கமாக பாசனத்துக்கு ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணை முன்கூட்டியே திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை வரலாற்றிலேயே, 13-வது முறையாக கால்வாய் பாசனத்துக்கு முன்கூட்டியே அணை திறக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, மேட்டூர் அணையின் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு நீர் திறப்பது இது 63-வது முறையாகும். முதற்கட்டமாக 300 கண அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்கு ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1 முதல் டிசம்பர் 15ஆம் தேதி வரை 137 நாட்களுக்கு 9.60 டி.எம்.சி, தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.
இந்நிலையில், இந்தாண்டு மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்து, அணை நிரம்பியிருக்கும் நிலையில், முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்படுகிறது. இதன் மூலம் சேலம் மாவட்டத்தில் 16,443 ஏக்கர், நாமக்கல் மாவட்டத்தில் 11,327 ஏக்கர், ஈரோடு மாவட்டத்தில் 17,230 ஏக்கர் என மொத்தம் 45,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
Read More : Vijay | கேரளாவில் நிலச்சரிவில் சிக்கி 66 பேர் பலி..!! தவெக தலைவர் விஜய் இரங்கல்..!!