Mettur Dam | மேட்டூர் அணையில் இருந்து அதிக அளவில் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதால், ஆடிப்பெருக்கு நாளில் மேட்டூர் அணைக்கு வருவதை பொதுமக்கள் தவிர்க்குமாறு மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி கேட்டுக் கொண்டுள்ளார். அனுமதிக்கப்பட்ட இடங்களைத் தவிர மற்ற இடங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார். காவிரி ஆற்றில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நீரில் இறங்கி குளிக்க, நீச்சல் அடிக்க, மீன்பிடிக்க மற்றும் புகைப்படம் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், காவிரி கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், அவர்களின் உயிர் மற்றும் உடைமைகளின் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் படியும் கேட்டுக் கொள்ளப்படுவதாக தமிழக நீர்வளத்துறை வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், வெள்ள அபாய எச்சரிக்கை குறித்து மேட்டூர் அணையின் உதவி செயற்பொறியாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன்படி சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், அரியலூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட 11 டெல்டா மாவட்ட ஆட்சியர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அறிக்கையை அனுப்பி வைத்துள்ளனர். இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் படியும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.