தமிழ்நாட்டில் விவசாயத்தை செழிக்க வைப்பதில் முக்கிய பங்காற்றும் மேட்டூர் அணைக்கு (Mettur Dam) இன்று 91-வது பிறந்தநாள்.
Mettur Dam | கடைமடை பகுதிகளுக்கு சீராக காவிரி வழங்கவும், பெருமழை காலங்களில் வெள்ளப்பெருக்கை தடுக்கவும் மேட்டூரில் அணைக் கட்ட அப்போதைய ஆங்கிலேய அரசு முடிவெடுத்தது. ஆனால், அதற்கு மைசூர் சமஸ்தானம் எதிர்ப்பு தெரிவித்தது. அப்படியெனில், பெருமழை காலங்களில் ஏற்படும் வெள்ள பாதிப்புகளுக்கு ஆளுக்கு 30 லட்சம் இழப்பீடு தருவீர்களா? என கேட்டு மைசூர் மன்னருக்கு கடிதம் எழுதினார் திருச்சி ஜில்லா ஆட்சியர். இந்த தொகையை கொடுக்க தயங்கிய மைசூர் சமஸ்தானம், வேறு வழியின்றி மேட்டூர் அணை கட்ட ஒப்புதல் வழங்கியது.
இதையடுத்து, அணைக்கான தூர்வாரும் பணிகள் தொடங்கின. ராணுவ பொறியாளர் எல்லீஸ் 4 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் திட்டத்தை தயார் செய்து பிரிட்டிஷ் அரசுக்கு அனுப்பி வைத்தார். இதை ஏற்ற பிரிட்டிஷ் அரசு, அணை கட்ட அனுமதி அளித்தது. இதையடுத்து, 1924ஆம் ஆண்டு பணிகள் தொடங்கிட 214 அடி உயரம், 171 அடி அகலம், 93.47 டி.எம்.சி. கொள்ளளவு திறனுடன் 59.24 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பிரம்மாண்டமான அணையை கட்டும் பணி நடைபெற்றது.
அணைக்கான கட்டுமானப் பணிகள் பல ஸ்காட்லாந்தில் இருந்து வரவழைக்கப்பட்டன. சுமார் 9 ஆண்டு காலம் பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையில் கம்பீரமான மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்டது. 1934ஆம் ஆண்டு ஜூலை 14ஆம் தேதி அணையின் பெரும் சுவரில் கடைசி கல் பதிக்கப்பட்டது. அந்த கல் இன்றும் மேட்டூர் அணையில் காட்சியளிக்கிறது. இதன் பின் ஆகஸ்ட் 21ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. அப்போதைய மெட்ராஸ் மாகாண ஆளுநர் சர் ஜார்ஜ் பிரெட்ரிக் ஸ்டான்லி அணையை திறந்து வைத்தார். இதனால் தான், அணைக்கு ஸ்டான்லி நீர்த்தேக்கம் என்றே அழைக்கப்பட்டது.
இதுவரை 1947, 1999, 2015 ஆண்டுகளில் அணையின் மேற்கு பகுதியில் மின்னல் தாக்கியது. எனினும், மேட்டூர் அணைக்கு சேதம் எதுவும் ஏற்படவில்லை. அணையிலிருந்து ஆண்டுதோறும் ஜூன் 12 முதல் ஜனவரி 28 வரை பாசனத்திற்கு நீர் திறந்து விடப்படும். இதன் மூலம் சேலம் மட்டுமின்றி கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 13 காவிரி டெல்டா மாவட்டங்களில் 17.10 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறும். நடப்பு ஆண்டு கடந்த ஜூலை 30ஆம் தேதி மேட்டூர் அணையானது, அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக தற்போது வரை அணையின் நீர்மட்டம் 120 அடியில் நீடித்து வருகிறது.
Read More : நாளை முதல் நாடெங்கும் நமது கொடி பறக்கும்..!! தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அறிவிப்பு..!!