Mettur Dam | காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, கர்நாடகாவின் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பின. அணைகளின் பாதுகாப்பு கருதி உபரி நீர் காவிரியில் திறக்கப்பட்டு வருகிறது. கர்நாடக அணைகளின் உபரி நீர் வரத்து காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இன்று (ஜூலை 28) காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,34,115 அடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் நேற்றிரவு 103.13 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று காலை 107.69 அடியாக உயர்ந்துள்ளது.

மேட்டூர் அணையின் நீர் இருப்பு 75.16 டிஎம்சியாக உள்ள நிலையில், அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இதே நிலையில் நீடித்தால், நாளை மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டும். அதன் பிறகு அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படும். அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வருவாய்த்துறை மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் எடுத்து வருகின்றனர்.

Read More : பொன் மகன் சேமிப்பு திட்டம் பற்றி தெரியுமா..? ரூ.500 இருந்தால் போதும்..!! வட்டி எவ்வளவு கிடைக்கும்..?