திருநெல்வேலி மாநகராட்சியில் முன்பு மேயராக இருந்த சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து மாநகராட்சியின் புதிய மேயரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெறுகிறது. அதில் திமுக தலைமை அறிவித்துள்ள ராமகிருஷ்ணன் சைக்கிளில் வந்து வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார். மேலும், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல் படி நடைபெறும் இந்த தேர்தலில் ஆளுங்கட்சியான திமுக சார்பில் 25-வது வார்டு உறுப்பினர் ராமகிருஷ்ணன் (எ) கிட்டு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

எனவே, காலை 10 மணிக்கு வேட்புமனு தாக்கல் தொடங்கும் என தேர்தல் நடத்தும் அலுவலர் மாநகராட்சி ஆணையர் சுகபுத்திரா அறிவித்திருந்தார். இந்நிலையில், நெல்லை மாநகராட்சியில் உள்ள 55 வார்டுகளில் 51 வார்டுகள் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளே கைவசம் வைத்துள்ளனர். அதில் யார் அதிக வாக்கு பெறுகிறார்களோ அவர்கள் வெற்றி பெறுவார்கள்.

திமுக சார்பில் அறிவிக்கப்பட்ட மேயர் வேட்பாளருக்கு எதிராக பவுல்ராஜ் போட்டி வேட்பாளராக களமிறங்கியுள்ளார். மேலும், பவுல்ராஜ் திமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதால், சுயேட்சையாகவே களமிறங்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இதற்கிடையில் மேயர் வேட்பாளர் ராமகிருஷ்ணன் சக திமுக கவுன்சிலர்கள் படை சூழ, சைக்கிளில் மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்துள்ளார்.

இவர் அனைத்து இடங்களுக்கும் சைக்கிள் மட்டும் தான் செல்வாராம், இவருக்கு சொந்தமாக கார், பைக் என எதுவும் கிடையாது என மக்கள் பொதுமக்கள் மத்தியில் கூறப்படுகிறது. தொடர்ந்து மறைமுக தேர்தலுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. தேர்தல் நடைபெறும் அரங்கிற்குள் செல்ல கவுன்சிலர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

அந்தவகையில் கவுன்சிலர் அனைவரும் சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, செல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.