ஈரோட்டில் யூடியூப் பார்த்து தனது காதலிக்கு பிரசவம் பார்த்த வாலிபரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயதுடைய ஒரு வாலிபர், கோவையில் படித்து வந்த 19 வயது இளம்பெண்ணை காதலித்து வந்தார். இவர்கள் திருமணம் செய்யாமல், கணவன் – மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர். அந்த பெண் ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இதற்கிடையில், மாணவி கர்ப்பமாகியிருந்தார். இந்த விஷயம் பெற்றோருக்கு தெரியாமல் இருக்க வேண்டும் என்பதால், வாலிபர் தனது தாயாருடன் அந்த பெண்ணை அழைத்து கோபிக்கு வந்துள்ளார்.
சமீபத்தில் அந்த பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. ஆனால் மருத்துவமனைக்குச் செல்லாமல், வாலிபர் யூடியூப்பில் வீடியோ பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்த்தார். இதில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. பிறகு அந்த பெண்ணுக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதால், ஒரு நாள் கழித்து வாலிபர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கே உள்ள மருத்துவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டு, இந்த விவரத்தை அரசு சுகாதாரத்துறைக்கு தெரிவித்தனர்.
அதன் பேரில், சுகாதார அதிகாரிகள் மருத்துவமனைக்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது, மாணவியும் வாலிபரும் திருமணம் செய்யவில்லை என்பதும், பிரசவம் வீட்டிலேயே நடந்ததையும், வாலிபரின் தாய் குழந்தையை பார்த்துக் கொண்டிருந்தார் என்பதையும் கண்டுபிடித்தனர். இந்த விவரம் தெரிய வந்ததும், சுகாதாரத்துறை அதிகாரிகள் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது, பிரசவம் நடந்த அறையிலிருந்து தொப்புள் கொடி கைப்பற்றப்பட்டது. தற்போது, வாலிபரிடம் இந்த நடவடிக்கை குறித்தும், மாணவியின் நிலை குறித்து விசாரணை நடந்து வருகிறது.