விநாயகர் சதுர்த்தி விழா அனைவராலும் ஆவலோடு எதிர்பார்க்கப்படும் ஒரு பண்டிகையாகும். விநாயகர் சதுர்த்தி விழா வட மாநிலங்களில் மட்டுமின்றி தென் மாநிலங்களில் 10 நாட்கள் உற்சவமாக கொண்டாடப்படுவது வழக்கம். பத்தாவது நாளில் வீடுகளிலும், பொது இடங்களிலும் அமைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, நீர் நிலைகளில் கரைக்கப்படும்.
முழு முதற் கடவுளான விநாயகர் வழிபாடு தடைகள், துன்பங்களை தீர்க்க கூடியது என்பதால் விநாயகரை வீட்டிற்கு வரவேற்பது முதல், எடுத்துச் சென்று கரைப்பது வரை அனைத்திற்கும் நல்ல நேரம் பார்த்தே செய்யப்படுகிறது. இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி அன்று, விநாயகர் சிலை வாங்குவதற்கான நல்ல நேரம், வழிபடும் முறை ஆகியவற்றை தெரிந்து கொள்ளலாம்.
விநாயகப் பெருமான் அவதரித்த நாளையே விநாயகர் சதுர்த்தி தினமாக ஆண்டுதோறும் கொண்டாடுகிறோம். ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி திதியில் தான் விநாயகப் பெருமான் அவதரித்ததாக புராணங்கள் சொல்கின்றன. வழக்கமாக ஒவ்வொரு மாதத்தில் வரும் தேய்பிறை சதுர்த்தியை தான் சங்கடஹர சதுர்த்தி என சிறப்பான வழிபாடுகளை செய்வோம். இந்த நாளிலேயே அதிகமானவர்கள் விரதம் இருந்து, விநாயகரை வழிபடுவார்கள். வளர்பிறை பிறை சதுர்த்தியில் அதிகமானவர்கள் விரதம் இருப்பது கிடையாது. ஆனால் வருடத்திற்கு ஒருமுறை ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தி நாளை விநாயகர் சதுர்த்தியாக, விரதம் இருந்து வழிபடுவதை வழக்கமாக வைத்துள்ளோம்.
2024ம் ஆண்டிற்கான விநாயகர் சதுர்த்தி திருநாள் நாளை(செப்டம்பர் 07) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, (செப்டம்பர் 06) இன்று மாலையே சதுர்த்தி திதி துவங்கி விடுவதால் எந்த நாளில் விநாயகர் சதுர்த்தி வழிபாட்டினை செய்ய வேண்டும் என்ற குழப்பம் பலருக்கும் ஏற்பட்டுள்ளது. செப்டம்பர் 07ம் தேதி அன்று தான் சூரிய உதய நேரத்தில் சதுர்த்தி திதி உள்ளதால் அந்த நாளை விநாயகர் சதுர்த்தியை கணக்கில் எடுத்துக் கொண்டு வழிபாடு செய்ய வேண்டும். அன்று மாலை 5 மணியுடன் சதுர்த்தி திதி நிறைவடைந்து விடுவதால் அதற்கு முன்பாக விநாயகர் சதுர்த்தி வழிபாடுகளை நிறைவு செய்து விட வேண்டும்.
விநாயகர் சதுர்த்தி அன்று காலையில் எழுந்து, குளித்து விட்டு, வீட்டை சுத்தம் செய்ய வேண்டும். விநாயகர் சிலை வைக்கும் இடத்தையும் செய்து, ஒரு மனைப்பலகையில் அரிசி மாவினால் கோலமிட்டு அலங்கரிக்க வேண்டும். பிறகு கடைக்கும் சென்று விநாயகர் சிலையை வாங்கி வந்து, பூஜை செய்து வழிபடலாம். செப்டம்பர் 07ம் தேதி சனிக்கிழமை என்பதால் காலை 9 முதல் 10.30 வரையிலான நேரம் ராகு கால நேரமாகும். அதே போல் பகல் 01.30 முதல் 3 வரையிலான நேரம் எமகண்ட நேரமாகும். இந்த நேரத்தில் விநாயகர் சிலை வாங்க செல்லவோ, விநாயகர் சதுர்த்தி வழிபாட்டினை செய்யவோ கூடாது.
நாளை காலை 07.35 முதல் 08.45 வரையிலான நேரம் விநாயகர் சிலை வாங்கி வந்து, வீட்டில் அமைக்கப்பட்டுள்ள மனைப்பலகையில் அமர்ந்து வழிபாடு செய்யலாம். அந்த நேரத்தில் முடியவில்லை என்றால், காலை 10.30 மணிக்கு பிறகு விநாயகர் சிலையை வாங்கி வந்து, வழிபாடு செய்யலாம். பகல் 01.30 மணிக்கு முன்பாக விநாயகர் வழிபாட்டினை நிறைவு செய்து விட வேண்டும். அதே போல் விநாயகர் சிலையை 3வது அல்லது 5 வது நாளில் எடுத்துச் சென்று நீர் நிலைகளில் கரைக்கவோ அல்லது அருகில் உள்ள கோவிலில் சென்று வைத்து விட்டோ வந்து விடலாம்.
வீட்டில் அமைத்துள்ள மனைப்பலகையில் வாங்கி வந்த விநாயகர் சிலையை எழுந்தருளச் செய்து, சந்தனம் மற்றும் குங்குமம் வைத்து, பூக்களால் அலங்கரிக்க வேண்டும். அருகம்புல், எருக்கம்பூ ஆகியவற்றை சாற்ற வேண்டும். விநாயகருக்கு முன் ஒரு அகல் விளக்கில், தீபம் ஏற்றி வைக்க வேண்டும். விநாயகருக்கு அனைத்து பூக்களும் ஏற்றது என்பதால் எந்த பூ கிடைக்கிறதோ, அந்த பூஜை 21 என்ற எண்ணிக்கையில் வைத்து விநாயகரை வழிபடுவது சிறப்பு. அதோடு விநாயகருக்கு விருப்பமான அவல், பொரி, கொழுக்கட்டை, மோதகம், சுண்டல், சர்க்கரை பொங்கல் போன்றவற்றை நைவேத்தியமாக படைத்து வழிபடலாம். விநாயகப் பெருமானுக்கு பழங்கள், குறிப்பாக வாழைப்பழம் படைத்து வழிபடுவது சிறப்பு.
விநாயகர் சிலையை கோவிலில் கொண்டு சென்று வைப்பதாக இருந்தால், கையோடு ஒரு கற்பூரத்தையும் எடுத்துச் சென்று, விநாயகருக்கு நன்றி தெரிவித்து, நம்முடைய கஷ்டங்கள் தீர வேண்டும் என வேண்டிக் கொண்டி கற்பூரம் ஏற்றி வழிபட்டு விட்டு வர வேண்டும். அதோடு விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகர் கோவிலுக்கு சென்று கண்டிப்பாக வழிபட வேண்டும். அங்கு நடக்கும் அபிஷேகம், பூஜைகளுக்கு தேவையானவற்றை வாங்கிக் கொடுக்கலாம். அதோடு தேங்காயை ஒன்று வாங்கிச் சென்று விநாயகருக்கு சிதறு தேங்காய் விடலாம். இதனால் இதுவரை வாழ்க்கையில் இருந்த தடைகள் அனைத்தும் விலகி, வளர்ச்சி, வெற்றி என்பது இருந்து கொண்டே இருக்கும்.