திருப்பதி லட்டு விவகாரம் குறித்து பட விழாவில் பேசியதையடுத்து பவன் கல்யாண் அதிருப்தியை வெளிப்படுத்திய நிலையில், நடிகர் கார்த்தி மன்னிப்பு கேட்டு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரசாதம் லட்டுவில் மாட்டுக்கொழுப்பு கலக்கப்பட்டது உறுதியானதையடுத்து பெரும் சர்ச்சையாக வெடித்து வருகிறது. இந்தநிலையில், நடிகர் கார்த்தியின் மெய்யழகன் தெலுங்கு ப்ரமோஷன் நிகழ்ச்சியில் அவரிடம் சிறுத்தை படத்தில் இடம்பெற்ற லட்டு நகைச்சுவை காட்சியை காட்டி லட்டு குறித்து கேட்கப்பட்டது. அதற்கு நடிகர் கார்த்தி அது ஒரு சென்சிட்டிவான விவகாரம் அது. எனக்கு அது வேண்டாம். லட்டே வேண்டாம் என்று பேசியிருந்தார்.

இவரது பேச்சுக்கு ஆந்திர துணை முதலமைச்சரும், பிரபல நடிகருமான பவன் கல்யாண் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். அதாவது, லட்டை வைத்து நகைச்சுவை செய்கிறார்கள். திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் கூட பேசினார்கள். லட்டு சென்சிட்டிவான விஷயம் என்று கூறியுள்ளார். ஒருபோதும் அப்படி கூறாதீர்கள். எப்போதும் அப்படி பேசக்கூட முயற்சிக்காதீர்கள். ஒரு நடிகராக உங்களை மதிக்கிறேன். ஆனால், சனாதன தர்மம் என்று வரும்போது ஒரு வார்த்தையை கூறும் முன்பு 100 முறை யோசிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதையடுத்து, நடிகர் கார்த்தி தனது எக்ஸ் பக்கத்தில், பவன்கல்யாண் ஐயா, உங்களுக்கு ஆழ்ந்த மரியாதையுடன், எதிர்பாராத தவறான புரிதலுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். வெங்கடேசப் பெருமானின் தாழ்மையான பக்தன் என்ற முறையில், நான் எப்போதும் நம் மரபுகளை அன்புடன் பின்பற்றுகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

Readmore: உஷார்!. உங்கள் ஆதார் எண் தவறாக பயன்படுத்தப்படுகிறதா..?. ஆன்லைனில் சரி செய்யலாம்!..