பருவமழை தொடங்கவுள்ள நிலையில் ஏற்காட்டில் நிலச்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் ராஜேந்திரன் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

வரும் 15ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பல்வேறு நோய்த்தொற்றுகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. இந்தநிலையில் புதிதாக அமைச்சராக பதவியேற்றுள்ள சேலம் ராஜேந்திரன், அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள காய்ச்சல் சிறப்பு பிரிவை நேற்று ஆய்வு செய்தார். காய்ச்சல் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளிடம் அமைச்சர் ராஜேந்திரன் உடல் நலம் குறித்து விசாரித்தார்.

இதனைத் தொடர்ந்து வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் சேலம் மாவட்ட தீயணைப்புத் துறை சார்பில் செய்யப்பட்டுள்ள சிறப்பு ஏற்பாடுகளையும் அமைச்சர் ராஜேந்திரன் பார்வையிட்டார். பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ரப்பர் படகுகள், மரங்கள் கீழே விழும் போது அகற்றுவதற்கான உபகரணங்கள் குறித்து தீயணைப்புத் துறையினர் விளக்கினர்.

இதையடுத்து, ஆட்சியர் பிருந்தாதேவி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர், சேலம் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது பேசிய அவர், குடிநீர் குழாய் அமைக்கும் பணி, கழிவு நீர் வாய்க்கால் சீரமைப்பு, மின்சார கம்பங்கள் சீரமைக்கும் பணியை உடனடியாக முடிக்க வேண்டும். மழையின் போது சாலையில் ஏற்படும் பள்ளங்களை நெடுஞ்சாலைத்துறையினர், உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து உடனடியாக சீர் செய்ய வேண்டும். மின்வழித்தடங்களில், மரக்கிளைகள் உரசாத வகையில் கவனம் செலுத்த வேண்டும்.

பள்ளிக்கட்டடம் மற்றும் அங்கன்வாடி மையங்களை பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து, மாணவ-மாணவியர் மற்றும் ஆசிரியர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சுகாதாரத்துறையினர். மருத்துவமுகாம்களை நடத்திட வேண்டும். தேவையான மருந்து மாத்திரைகளை இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், ஏற்காடு மலைப்பாதையில் அடிக்கடி நிலச்சரிவு ஏற்படுகிறது. பருவமழையின் போது மண் சரிவு , நிலச்சரிவு ஏற்பட சூழல் இருப்பதால் உரிய எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

Readmore: இதெல்லாம் வெட்கக்கேடு!. ரூ.3.5 லட்சம் கோடி கடன்!. எந்த பெரிய திட்டமும் இல்லை!. திமுகவை விளாசிய எடப்பாடி பழனிசாமி!.