பலத்த மழை பெய்துவருவதால் திருவண்ணாமலையில் வீடுகள் மீது பாறை உருண்டு விழுந்ததில் 7 பேர் மண்ணுக்கு அடியில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திருவண்ணாமலை தீபமலைப்பகுதியில் ஒரு வீட்டின் மீது பாறை உருண்டு மண் சரிவு ஏற்பட்டதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. பெஞ்சல் புயல் காரணமாக திருவண்ணாமலையில் நேற்று மிக கனமழை பெய்தது. இந்நிலையில், திருவண்ணாமலை வஉசி நகர் பகுதியில், தீபம் ஏற்றும் மலை பகுதியில் சுமார் 100 மீட்டர் உயரத்தில், திடீரென மண் சரிவு ஏற்பட்டு, ராட்சத பாறை உருண்டு, மலை பகுதியில் இருந்த ஒரு வீட்டின் மீது விழுந்தது.

இதனால் அந்த வீட்டிற்குள் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் சிக்கி கொண்டனர். தொடர்ந்து மழை பெய்வதால் அப்பகுதி சேறும் சகதியுமாக மாறியது. இதனால் அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. உடனே இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்தும், கனமழை நின்ற பிறகே அந்தப் பகுதிக்கு செல்ல முடிந்தது. தொடர்ந்து மண் சரிவு ஏற்பட்டதால் இடிபாடுகளில் சிக்கிய வீட்டிற்கு அருகே செல்வதில் சிக்கல் ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து, கலெக்டர் பாஸ்கர பாண்டியன், எஸ்பி சுதாகர், டிஆர்ஓ ராமபிரதீபன் மற்றும் தீயணைப்புத் துறையினர் நேற்று இரவு 8 மணி அளவில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை முடுக்கிவிட்டனர். மீட்பு பணி குறித்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கூறுகையில், ‘திருவண்ணாமலையில் இதுவரை எப்போதும் இல்லாத அளவில் மிக கனமழை பெய்தது. இதனால் மலையில் மண் சரிவு ஏற்பட்டு ஒரு வீடு முழுவதுமாக சிக்கி உள்ளது. அதில், இருந்தவர்கள் நிலை என்ன என்பது குறித்து விசாரித்து வருகிறோம்.

இடிபாடுகளில் சிக்கி உள்ளனரா அல்லது வேறு எங்காவது சென்றுள்ளனரா, எத்தனை நபர்கள் வீட்டுக்குள் இருந்தனர் என்கிற விவரம் இதுவரை உறுதியாக தெரியவில்லை. தொடர்ந்து, அந்தப் பகுதியில் மண் சரிந்து கொண்டிருப்பதாலும், பாறை உருண்டு விழும் ஆபத்தான நிலையில் இருப்பதாலும் இரவு நேரத்தில் மீட்பு பணியை மேற்கொள்வது சிக்கலாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

Readmore: அதிர்ச்சி!. சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு!. எவ்வளவு தெரியுமா?