தமிழ்நாடு முழுவதும் அடுத்த மாதம் முதல் புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணி தொடங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதில், குடும்பத் தலைவி ஆகும் பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை எப்போது வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக புதிய ரேஷன் அட்டை வழங்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே, மக்களவைத் தேர்தல் முடிவடைந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணி அடுத்த (ஆகஸ்ட்) மாதம் முதல் தொடங்க இருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதற்கிடையே, பெண்களுக்கான மகளிர் உரிமை தொகை திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இம்மாதம் (ஜூலை) முதல் மேலும் 1.48 லட்சம் பெண்களின் வங்கிக் கணக்கில் ரூ.1,000 வரவு வைக்கப்பட்டது.
இந்நிலையில், மகளிர் உரிமைத்தொகை திட்டம் மேலும் விரிவாக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக அரசு தரப்பு அதிகாரிகள் சில முக்கிய தகவல்களை தெரிவித்துள்ளனர். அதாவது, இனி அடுத்த வருடம் மீண்டும் உரிமைத்தொகை திட்டம் விரிவாக்கப்படும் செய்யப்படும் என்றும் அப்போது புதிதாக திருமணம் ஆனவர்கள், அரசுப் பணியில் இருந்து காலமான ஆண்களின் மனைவிகள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர். அதேபோல், ஒவ்வொரு வருடமும் புதிய பயனாளிகள் இணைக்கப்படுவார்கள் என்று அரசு தரப்பு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.