விஜய் கூறுவது கொள்கை கிடையாது, அது கூமுட்டை என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்துள்ளார்.
திராவிடம் மற்றும் தமிழ் தேசியம் என்றால் என்னவென்று ஒரு தரப்பினருக்கு தெரியவில்லை எனக் கூறினார். இவ்வாறு கூறுவது கொள்கை கிடையாது, வெறும் அழுகிய கூமுட்டை என விமர்சித்த சீமான், இதென்னடா காட்டுப்பூனைக்கும் நாட்டுக்கோழிக்கும் வந்த சோதனை என ஒப்பிட்டு பேசினார்.
மேலும், “கொள்கையை பொறுத்தவரை சரியான நிலைப்பாட்டில் இருக்க வேண்டும். சாலையின் ஏதாவது ஒரு ஓரத்தில் தான் நிற்க வேண்டும். நடுநிலையாக இருந்தால் லாரி மோதி இறக்க நேரிடும். இது நடுநிலை அல்ல, கொடுநிலை” எனக் கடுமையாக த.வெ.க தலைவர் விஜய்யை விமர்சித்தார். த.வெ.க. வின் அடிப்படையே தவறாக இருப்பதாக கூறிய சீமான், இட்ஸ் வெரி ராங் ப்ரோ எனக் கூறினார்.
த.வெ.க.வின் கொள்கை தலைவர்கள் குறித்து பேசிய சீமான், வேலு நாச்சியார், சங்கரலிங்கனார் குறித்து தான் பேச தொடங்கிய பின்னரே மற்றவர்கள் பேசியதாக கூறினார். இதேபோல், வேலுநாச்சியாருக்கு த.வெ.க மாநாட்டில் கட்-அவுட் அமைக்கப்பட்டிருந்ததை விமர்சித்த சீமான், வேலு நாச்சியாரை விஜய்க்கு யாரென்று தெரியுமா எனக் கேள்வி எழுப்பினார்.
இதேபோல், “நான் குட்டிக் கதை கூறுவதற்காக அரசியலுக்கு வரவில்லை, வரலாற்றை கூறுவதற்காக வந்தவன். குளிரூட்டப்பட்ட் அறையில் இருந்து வந்தவன் நானல்ல, கொடுஞ்சிறையில் இருந்து வந்தவன். எங்கள் கோட்பாடு என்றும் ஒன்று தான். எங்கள் லட்சியத்திற்கு எதிராக பெற்றோரே வந்தாலும் எதிரி தான். இதில் அண்ணன், தம்பி என்று பார்க்க முடியாது” என தொடர்ச்சியாக விஜய்யை சாடினார்.
“விஜய் இனி தான் அம்பேத்கர், பெரியார் குறித்து படிக்க வேண்டும். நான் அதில் பி.ஹெச்.டி பட்டம் பெற்றவன். சங்க இலக்கியங்கள் எங்கே என அவர்கள் இனி தான் தேடுவார்கள். ஆனால், நாங்கள் பாண்டிய அரசனின் பேரன் மற்றும் பேத்திகள்” எனவும் சீமான் விமர்சித்திருந்தார். த.வெ.க மாநாட்டில் தி.மு.க-வை விஜய் நேரடியாக விமர்சித்திருந்தார். அதற்கு அக்கட்சியினர் தரப்பில் எதிர்வினையாற்றப்பட்டது. ஆனால், தி.மு.கவினரை விட, விஜய் மற்றும் அவரது கொள்கைகளை சீமான் மிகக் கடுமையாக விமர்சித்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
முன்னதாக, “நமது கொள்கைகளை கேட்டு நமக்கு எதிராக பேசுபவர்கள் மூலம் நம்முடைய அரசியல் எதிரி யாரென்று தெரிந்து விடும்” என த.வெ.க மாநாட்டில் விஜய் பேசியிருந்தார். இதைச் சுட்டிக்காட்டி த.வெ.க தொண்டர்கள் சீமானுக்கு பதிலளித்து வருகின்றனர். மேலும், இது நாள் வரை விஜய்யை தம்பி என அழைத்த சீமான், தற்போது கொள்கை முரண்பாடுகள் காரணமாக கடுமையாக சாடியிருப்பதாகவும் அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.