தேவூர் அருகே கல்வடங்கம் அங்காளம்மன் கோவில் தேர்த் திருவிழாவில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.
சேலம் மாவட்டம் தேவூர் அருகே கல்வடங்கம் காவேரி ஆற்றங்கரையோரம் மிகவும் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில், கோவில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, கோயில் சன்னதி முன்பு தேர் அலங்கரிக்கப்பட்டு மார்ச் 1ஆம் தேதி பக்தர்கள் இழுத்துச் சென்று மாரியம்மன் கோவில் முன்பு நிலை நிறுத்தினர்.
2-வது நாளில் அங்கிருக்கும் ரேஷன் கடை முன்பு நிலை நிறுத்தப்பட்டது. 3-வது நாளான நேற்று சேலம், கல்வடங்கம், கொட்டாயூர், பூமணியூர், நல்லங்கியூர், காவேரிபட்டி, வட்ராம்பாளையம், எடப்பாடி, தேவூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதி மக்கள் திரளாக கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து கோஷம் எழுப்பி கோவில் சன்னதி முன்பு தேர் நிலை நிறுத்தினர். இதனைத் தொடர்ந்து, சிறப்பு பூஜைகள் மற்றும் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.