தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டை சேலத்தில் நடத்துவது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆய்வு மேற்கொண்டார். சேலம் மாவட்டம் தலைவாசல், கெஜல்நாயக்கன்பட்டி, காக்காபாளையம் ஆகிய 3 இடங்களிலும் ஆய்வு செய்தார். சேலம் மாவட்டத்தில் முதல் நாட்டை நடத்துவதற்காக முடிவு செய்யப்பட்டு அதற்கான இடம் தேர்வு செய்யும் பணி தற்போது நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த முதல் மாநாட்டில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் வகையில், பிரம்மாண்ட திடல் அமைக்கப்பட உள்ளதாகவும், செப்டம்பர் மாதம் இறுதியில் அல்லது நவம்பர் மாதம் தொடக்கத்தில் மாநாடு நடக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சிங்கப்பூர், மலேசியா, ஸ்ரீலங்கா, கனடா உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் ரசிகர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வரலாறு படைத்த திடல்: சேலம் மாவட்டம் கெஜல்நாயக்கன்பட்டியில் உள்ள திடலில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெற அதிக வாய்ப்புள்ளது. ஏனென்றால், கடந்த 2014இல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இந்த திடலில் தான் பிரச்சாரத்தை தொடங்கினார். அந்த தேர்தலில் அதிமுக 37 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதேபோல், மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் அதே திடலில் மாநாடு நடத்திய பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் ஆனார். சமீபத்தில் நடைபெற்ற 2024 நாடாளுமன்ற தேர்தலின்போது கூட பிரதமர் மோடி இதே கெஜல்நாயக்கன்பட்டி திடலில் தனது முதல் பிரச்சாரத்தை தொடங்கினார். எனவே, இந்த வரலாற்று சிறப்புமிக்க திடலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முதல் மாநில மாநாடு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சேலம் மாவட்ட விஜய் ரசிகர்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் உற்சாகத்தில் திகைத்துள்ளனர்.

Read More : பெண்களே..!! உரிமைத்தொகை குறித்து வெளியான சூப்பர் குட் நியூஸ்..!! மேலும் விரிவாக்கம்..!!