அரசுப் பேருந்து நிற்காமல் சென்றதால், பிளஸ்2 மாணவி ஓடிச்சென்று பேருந்தில் ஏறிய சம்பவத்தின் வீடியோ வைரலாகி வருகிறது.
தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இறுதி நாளான இன்று இயற்பியல், பொருளாதாரம் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகள் நடக்கிறது. நாளை முதல் அவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான், பேருந்து நிறுத்தத்தில் அரசுப் பேருந்து நிற்காமல் சென்றதால், பிளஸ்2 மாணவி ஓடிச்சென்று பேருந்தில் ஏறிய சம்பவத்தின் வீடியோ வைரலாகி வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் இருந்து இன்று காலை ஆலங்காயம் நோக்கி அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து கொத்தகோட்டை கிராமத்தில் உள்ள பஸ் நிறுத்தத்தை நெருங்கியபோது, பிளஸ்2 பொதுத்தேர்வு எழுத காத்திருந்த மாணவி, பேருந்தை கைகாட்டி நிறுத்த முயன்றார்.
ஆனால், பேருந்து ஓட்டுநர் நிற்காமல் சென்றார். இதனால், பதறிப்போன மாணவி, பஸ்சை விட்டுவிட்டால் தேர்வுக்கு செல்ல முடியாதே என்ற அச்சத்தில் பஸ்ஸின் கம்பியை பிடித்தவாறு பின்னால் ஓடிச் சென்றார். பின்னர், சற்று தூரம் சென்று பேருந்து நிறுத்தப்பட்ட நிலையில், மாணவி பேருந்தில் ஏறி தேர்வெழுத சென்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில், சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்தனர்.
நிற்காமல் சென்ற பேருந்து | பதறி அடித்து ஓடிய பள்ளி மாணவி
— ABP Nadu (@abpnadu) March 25, 2025
வாணியம்பாடி அருகே கொத்தக்கோட்டையில் பேருந்திற்காக காத்திருந்த பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி.
பேருந்து நிற்காமல் சென்றதால் பதறி அடித்துக்கொண்டு பேருந்தை பின் தொடர்ந்து ஓடி ஏறி, பரீட்சைக்கு சென்றார்.#Thiruppathur… pic.twitter.com/hDpslfbh3z
இந்நிலையில், தேர்வு எழுவதற்காகப் பள்ளி செல்ல காத்திருந்த மாணவியை ஏற்றாமல் சென்ற, அரசுப் பேருந்து ஓட்டுநர் முனிராஜிடம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக (விழுப்புரம்) மேலாண்மை இயக்குநர் விசாரணை நடத்திய நிலையில், அவர் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.