கும்பகோணம் அருகே அரசு பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் ஆகியும் புதிய கட்டிடம் கட்டப்படாததால் அடிப்படை வசதிகள் இல்லாத தற்காலிக இடத்தில் பள்ளி மாணவ மாணவிகள் கல்வி கற்கும் அவலம் நிலவியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே குடமங்கலம் கிராமத்தில் இயங்கி வந்த அரசு ஆதிதிராவிடர் நலத் தொடக்கப்பள்ளி கட்டிடம் சேதமடைந்ததால் நான்கு ஆண்டுகளுக்கு முன் இடிக்கப்பட்டது. இதனையடுத்து, கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று அங்குள்ள தேவாலய கட்டிடத்தில் தற்காலிகமாக பள்ளிக்கூடம் செயல்பட தேவாலய நிர்வாகத்தினர் அனுமதி வழங்கினர்.
ஆனால், தேவாலய கட்டிடத்தில் தேவையான அடிப்படை வசதிகள் இல்லாததால் மாணவ மாணவிகள் கல்வி கற்பதில் கடுமையான சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக தெரிவித்தனர். மேலும், மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு இனியாவது பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டி தரவேண்டும் என கிராம மக்கள் வேதனையுடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.