திருச்சி தில்லைநகர் காவல்துறையினர் ஒரே புகாரின் பேரில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 22 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமார், புகார் அளித்திருந்த நிலையில், 22 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதாவது, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலின் போது முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதாக நாம் தமிழர் நிர்வாகி சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டார். இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய சீமான், திருச்சி எஸ்பி வருண்குமாரை சாதி ரீதியாக சுட்டிக்காட்டி விமர்சித்திருந்தார். மேலும், பல்வேறு கேள்விகளையும் முன் வைத்தார்.
இதற்கிடையே, நாம் தமிழர் கட்சியை சேர்ந்த காளியம்மாளை சீமான் கடுமையான திட்டியது தொடர்பான ஆடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த ஆடியோவை திருச்சி எஸ்பி வருண்குமார் தான் வெளியிட்டதாக சீமான் குற்றம்சாட்டினார். இதையடுத்து, காவல்துறையை அவதூறாக பேசியதாக சீமானுக்கு நோட்டீஸ் அனுப்பியதாக கூறப்படுகிறது. மேலும், தம்பி கரிகாலன் என்ற பெயரில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஒருவர், திருச்சி எஸ்பி வருன்குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்து பதிவிட்டிருந்தார்.
இதுகுறித்து எஸ்பி வருண்குமார் அளித்த புகாரின் பேரில் 22 பேர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, திருப்பதி, கண்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், இவர்களை கொலை மிரட்டல் விடுக்க தூண்டியதாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கட்சியின் முக்கிய நிர்வாகிகளான சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்திக் ஆகியோர் மீதும் எஸ்.பி. வருண் குமார் புகார் அளித்துள்ளார் என்று கூறப்படுகிறது.
Read More: