அண்மையில் நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் ஆந்திரா மற்றும் பீகார் மாநிலங்களுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கப்பட்டதாக கூறி எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில், இன்று டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மாநில முதலமைச்சர்கள் கலந்துகொள்ளும் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தை ஏற்கனவே புறக்கணிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதலமைச்சர்கள் அறிவித்துவிட்டனர்.
இண்டியா கூட்டணியில் இருந்து நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஒரே முதல்வராக மம்தா பானர்ஜியும் கூட்டத்தில் இருந்து பாதியில் வெளியேறினார். நிதி ஆயோக் கூட்டத்தில் மற்ற முதல்வர்களை காட்டிலும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிக நேரம் பேசினார். சுமார் 20 நிமிடங்களுக்கு மேல் அவர் பேசினார். இதனால் பொறுமை இழந்த மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி நிதி ஆயோக் கூட்டத்தில் இருந்து வெளியேறினார்.
மேலும், கூட்டத்தில் தனக்கு பேச சரியான வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும், பாஜக ஆளும் மாநில முதல்வர்களுக்கே அதிக வாய்ப்பு கொடுக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டினார். இந்நிலையில், முதல்வர் மம்தா பானர்ஜிக்கு வாய்ப்பு வழங்காததற்கு முதலமைச்சர் முக.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், ”ஒரு முதலமைச்சரை இப்படித்தான் நடத்துவதா? எதிர்க்கட்சிகள் நமது ஜனநாயகத்தின் ஒரு அங்கம் என்பதை மத்திய பாஜக அரசு புரிந்து கொள்ள வேண்டும். கூட்டுறவு கூட்டாட்சிக்கு அனைத்து குரல்களுக்கும் உரையாடல் மற்றும் மரியாதை தேவை” என்று கூறியுள்ளார்.
Read More : முழு கொள்ளளவை எட்ட காத்திருக்கும் மேட்டூர் அணை..!! 13 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!!