விக்கிரவாண்டி செப்டிக் டேங்கில் குழந்தை விழுந்து உயிரிழந்ததாக கூறப்படும் விவகாரத்தில், புதிய சிசிவிடி காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் குழந்தையை கையில் வைத்துக்கொண்டே ஆசிரியர்கள் தேடுவது போன்று காட்சிகள் இடம்பெற்றுள்ளது மேலும் சந்தேகத்தை எழுப்புகிறது.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியைச் சேர்ந்தவர் பழனிவேல். திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்பந்தப் பணியாளராக பணியாற்றி வரும் இவரது மூன்றரை வயது குழந்தை லியா லட்சுமி. விக்கிரவாண்டியில் இருக்கும் தனியார் பள்ளியில் எல்.கே.ஜி படித்து வந்த லியா லட்சுமி, “பள்ளியில் மதிய உணவுக்குப் பிறகு கழிவறைக்குச் சென்றபோது, அங்கிருந்த செப்டிக் டேங்க் மீது ஏறியதாகவும், அந்த செப்டிக் டேங்க் மூடி துருப்பிடித்து இருந்ததால் உடைந்து குழந்தை உள்ளே விழுந்து உயிரிழந்துவிட்டதாக கூறப்பட்டது.
2,000 பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் பாதுகாப்பு என்பது பேச்சுக்குக் கூட இல்லை. சுற்றுச் சுவர் போடாமல், வேலியை போட்டு வைத்திருக்கிறார்கள். இத்தனை குழந்தைகள் படிக்கும் இடத்தில் செப்டிக் டேங்க்கை இந்த அளவுக்கா வைத்திருப்பார்கள் ? என்பது உள்ளிட்ட கேள்விகள் எழுப்பப்பட்டு வரும் நிலையில், குழந்தையின் பெற்றோர்களும் இறப்பில் சந்தேகம் உள்ளது என்று போலீசில் புகார் அளித்துள்ளனர். மேலும் இது தொடர்பாக விக்கிரவாண்டி காவல் நிலைய காவல்துறையினர் சந்தேகம் மரணம், பணியில் அஜாக்கரதையாக இருப்பது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதில் பள்ளி தாளாளர் எமில்டா, முதல்வர் டோம்னிக் மேரி, வகுப்பு ஆசிரியர் ஏஞ்சல்ஸ், மூவரையும் கடந்த 3ம் தேதி நள்ளிரவில் போலீசார் கைது செய்தனர்.
முன்னதாக, செப்டிக் டேங்க்கிலிருந்து குழந்தையை நான்தான் தூக்கிச் சென்றேன் என்றும் கூறும் பள்ளியின் ஓட்டுநர் கோபால், `குழந்தையை காணோம் என்று ஆசிரியைகள் கூறியதால் நான் ஓடிச் சென்றேன். அப்போது செப்டிக் டேங்க் மூடி உடைந்திருக்கிறது என்று அவர்கள் கூறியதால் அதற்குள் எட்டிப் பார்த்தேன். அங்கு குழந்தையின் ஷூ தெரிந்தது. அதன்பிறகு கம்பி மூலம் குழந்தையின் ஆடையை பிடித்து மேலே தூக்கினேன்” என்றவரிடம்,குழந்தையின் உள்ளாடை ஈரமாகவே இல்லை. அதேபோல குழந்தையின் உடலிலும் எந்த காயங்களும் இல்லையே ?’ என்று கேள்வி எழுப்பப்பட்டது. கம்பி மூலம் குழந்தையின் ஆடையில் மாட்டித்தான் குழந்தையை மேலே தூக்கினேன். அதனால்தான் உடலில் எந்த காயங்களும் இல்லை. அதன்பிறகுதான் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம்” என்று கூறியிருந்தார்.
இந்தநிலையில், தற்போது இந்த விவகாரம் தொடர்பாக புதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. அதில், இறந்த குழந்தையின் உடலை தூக்கிகொண்டு ஆசிரியை ஒருவர் அங்கும் இங்கும் திரிவது போல் தெரிகிறது. அதாவது, உயிரிழந்த குழந்தையை கையில் வைத்துக்கொண்டே செப்டிக் டேங்கில் இருந்து எடுத்தோம் என்று நாடகமாடுவதாக கூறப்படுகிறது. மேலும், பள்ளியின் வகுப்பு ஆசிரியை சிறுமியை தாக்கியதாகவும், சிறுமியுடன் படித்த தோழி ஒருவர், உயிரிழந்த சிறுமியின் பெற்றோரிடம் தெரிவித்து இருக்கிறார். மேலும் சிறுமியின் ரிப்பனில் இரத்தக்கறை இருந்தது தொடர்பாகவும் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.