உலகில் மிகவும் அதிக பயன்பாட்டில் உள்ள தாவர எண்ணெய் பாமாயில். இன்று காலையில் நீங்கள் பயன்படுத்திய ஷாம்பூ அல்லது சோப்பு, பற்பசை, வைட்டமின் மாத்திரைகள் அல்லது மேக்கப் பொருள்களில் பாமாயில் இருந்திருக்கும். காலை சிற்றுண்டிக்காக ரொட்டி டோஸ்ட் செய்யும் போது பயன்படுத்தி இருக்கலாம் அல்லது ரொட்டி மீது தடவிய செயற்கை வெண்ணெயில் அல்லது உங்கள் காபியில் பயன்படுத்திய கீரிமரில் இருந்திருக்கலாம். இன்றைக்கு நீங்கள் பயன்படுத்தியது பாமாயிலாகத்தான் இருந்திருக்கும் என்பது ஏறத்தாழ நிச்சயமான விஷயம். சதவீத நுகர்வோர் பொருள்களில் பாமாயில் உள்ளது. தொழிற்சாலை பயன்பாடுகள் பலவற்றிலும் அது பங்கு வகிக்கிறது.
நம் வாழ்வில் இணைந்த பொருளாக பாமாயில் இருக்கிறது. அதன் விசேஷமான ரசாயன பண்பு தான் அதற்குக் காரணம். மேற்காசிய எண்ணெய் பனை விதைகளில் இருந்து எடுக்கப்படும், வாசனையற்ற, வெளிறிய நிறத்தில் உள்ள இந்த எண்ணெய், உணவுப் பொருளுடன் சேர்க்க சௌகரியமானதாக இருக்கிறது. இதன் உருகும் வெப்ப நிலை அதிகம். நிறைகொழுப்பு அளவும் அதிகம்.
பாமாயில் எண்ணெய் பனை மரங்களின் பழங்களின் கச்சா கூழில் இருந்து எடுக்கப்படுகிறது. பீட்டா கரோட்டின் (வைட்டமின் ஏ முன்னோடி) நிறைந்திருப்பதால் சுத்திகரிக்கப்படாத பாமாயில் சிவப்பு நிறத்தில் இருக்கும். ஆனால் கச்சா பாமாயிலை சுத்திகரிக்கும் போது இந்த கரோட்டின்கள் இழக்கப்படுகின்றன.
பாமாயிலில் 45% கொழுப்பு அமிலங்கள் செறிவூட்டப்பட்ட வகையிலும், 40% மோனோசாச்சுரேட்டட் வகையிலும், 10% பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமில வகையிலும். ஆரோக்கியமானது என்று கருதப்படும் மோனோசாச்சுரேட்டட் ஃபேட்டி ஆசிட் (MUFA) பாமாயிலில் ஏராளமாக இருப்பதால் இதயத்திற்கு ஏற்றதாக இருக்கும்.
உலகளவில் மொத்த எண்ணெய் உற்பத்தியில் 40% பாமாயில் பங்கு வகிக்கிறது. தேங்காய் எண்ணெய்யில் 92% நிறை கொழுப்பு உள்ளது. பாமாயிலில் 40 சதவீதம் நிறை கொழுப்பு உள்ளது. கடலை எண்ணெய்யில் நிறை கொழுப்பு 20% உள்ளது. பாமாயில், கடலை எண்ணெய் இரண்டிலுமே மோனோசாச்சுரேட்டட் ஃபேட்டி ஆசிட் என்று அழைக்கப்படும் கொழுப்பு 40% உள்ளது. இதுதான் ஆரோக்கியமான கொழுப்பு என்று கருதப்படுகிறது.
ஆனால் பாமாயிலில் நிறை கொழுப்பு அதிகம் உள்ளதால் அது ஆரோக்கியமற்றது என்று கருதப்படுகிறது. ஆனால் பாமாயிலில் நிறை கொழுப்பு மற்றும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு இரண்டுமே சமமான அளவில் இருப்பதால் இது ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலை அதிகரிக்கிறது என்று எந்த ஆராய்ச்சியிலும் நிரூபிக்கப்படவில்லை.
குறிப்பாக இது கெட்டக் கொழுப்பை அதிகரிப்பதில்லை என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ரேஷன் கடைகளில் கிடைக்கும் பாமாயில் சாப்பிடுவதால் கொழுப்பு அதிகரிக்காது, இதய நோய் ஏற்படும் ஆபத்தும் இல்லை. அரசு ஏதாவது மலிவான விலையில் கொடுத்தாலே அது தரமற்றதாக இருக்கும் என்ற பொதுவான எண்ணத்தின் காரணமாகவே பாமாயில் ஆரோக்கியமற்றதாக கருதப்படுகிறது என்று நிபுணர்களின் கருத்தாக உள்ளது.