திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்தவர் சாம்ராஜ் (வயது 29). சென்னையில் பணியாற்றி வரும் இவருக்கும், தன்னுடன் வேலை பார்க்கும் பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, காதலித்து வந்துள்ளனர். தனது காதலியை ஆசைவலையில் வீழ்த்திய சாம்ராஜ், திருமணம் செய்வதாக கூறி அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளார். இதற்கிடையே, சாம்ராஜ்க்கு திருமணம் முடித்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்தனர். இதற்கிடையே, சாம்ராஜ்க்கு திருமணம் நடைபெற இருக்கும் தகவல், அவரது காதலியான சென்னையை சேர்ந்த இளம்பெண்ணுக்கு தெரியவந்தது.
இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெண், உடனே ஆரணிக்கு விரைந்தார். அங்கு சென்று, தனது காதலன் சாமராஜ்ஜிடம் ஏன் இப்படி ஏமாற்றுகிறாய்? என்னை காதலித்து விட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்வது நியாயமா? என கேட்டுள்ளார். ஆனால், தன்னை விட வயது அதிகம் என்பதால், உன்னை திருமணம் செய்ய எனது பெற்றோர் சம்மதிக்கவில்லை என்று சாம்ராஜ் கூறியுள்ளார். இதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, சாம்ராஜ்ஜின் பெற்றோர் அந்த பெண்ணிடம் சென்று பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்து அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த பெண் மீண்டும் தனது வழக்கறிஞருடன் திருமண மண்டபத்திற்கு வந்துள்ளார். அங்கு மணமேடையில் இருந்த மணமகளிடம், சாம்ராஜ் என்னை காதலித்து ஏமாற்றிவிட்டு உன்னை திருமணம் செய்வதாகவும், திருமணத்தை நிறுத்த நாங்கள் வந்துள்ளதாகவும் கூறினார். இதை கேட்டதும் மணமகள் வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, மணமகள் இந்த திருமணமே எனக்கு வேண்டாம் என கூறிவிட்டு மண்டபத்தை விட்டு வெளியேறி ஆட்டோவில் வீட்டுக்கு சென்றார். இதனைத் தொடர்ந்து இரு குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் இரு குடும்பத்தினரையும் சமரசம் செய்தனர்.