கல்லீரல் அழற்சி நோய்களை ஒழிக்க, பிறக்கும் குழந்தைகளுக்கு ஹெபடைடிஸ் B தடுப்பூசியை ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவசமாக செலுத்தி கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
கல்லீரலில் வைரஸ் காரணமாக ஏற்படும் வீக்கம்தான், “கல்லீரல் அழற்சி” என்று சொல்லப்படுகிறது. கல்லீரலை பாதிக்கும் வைரஸ் கிருமிகள் ஹெபடைடிஸ் என்று அழைக்கப்படுகின்றன. சுகாதாரமற்ற உணவு, தண்ணீரை சாப்பிடுவது போன்றவற்றால், கல்லீரல் அழற்சி ஏற்படுகிறது. காய்ச்சல், உடல் சோர்வு, தோல் மற்றும் கண்கள் மஞ்சள் நிறமாதல் (மஞ்சள் காமாலை), அடர்ந்த நிறத்தில் சிறுநீர் வெளியேறுதல், குமட்டல், வாந்தி, வயிற்று வலி, ரத்த வாந்தி போன்றவை கல்லீரல் அழற்சியின் அறிகுறிகளாகும்.
கல்லீரல் அழற்சியால் ஹெபடைடிஸ் A, E பாதிப்புகள் வரலாம். கல்லீரல் செயலிழப்பும் ஏற்படலாம். ஹெபடைடிஸ் B, C வைரஸ் பாதிப்பால் கல்லீரல் சுருக்கமும் ஏற்பட்டுவிடும். இதற்கு சிர்ரோசிஸ் என்பார்கள். சிர்ரோசிஸ் நிலை ஒருவருக்கு வந்துவிட்டால், அதை குணப்படுத்துவது மிக கஷ்டம். இந்த பாதிப்பை சரி செய்ய முடியாது என்கிறார்கள். மொத்தத்தில், கல்லீரல் வேலை செய்யாமல் போனால், உடலில் உள்ள தண்ணீரை வெளியேற்ற முடியாமல் கை, கால்களில் நீர் சேர்ந்துவிடும். மயக்க நிலை, ரத்த வாந்தி ஏற்பட வாய்ப்புள்ளது. இதுவே தீவிரம் அடைந்து, மஞ்சள் காமாலையில் கொண்டுபோய் விடும். அத்துடன் ஹெபடைடிஸ் B காரணமாக எப்போது வேண்டுமானாலும் கல்லீரல் புற்றுநோய் ஏற்படலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்நிலையில், தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறுகையில், “உலக கல்லீரல் அழற்சி நோய் என்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது. சுகாதாரத்துறையில் பணியாற்றும் அனைவருக்கும் ஹெபடைடிஸ் B தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதேபோல், பிறக்கும் குழந்தைகளுக்கும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ஹெபடைடிஸ் B தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படுகிறது.
குழந்தை பிறந்த 24 மணி நேரத்திலும், 6-வது வாரம், 10-வது வாரம், 14-வது வாரம் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. பெண்டாவேலண்ட் தடுப்பூசியில் ஹெபடைடிஸ் B தடுப்பூசியும் சேர்க்கப்பட்டுள்ளது. கல்லீரல் அழற்சி நோய்க்கான முக்கிய அறிகுறியாக மஞ்சள் காமாலை உள்ளது. கல்லீரல் அழற்சி நோயை ஒழிக்க குழந்தைகளுக்கு ஹெபடைடிஸ் B தடுப்பூசியை செலுத்த வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
Read More : இனி தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி இலவசம்..!! விரைவில் புதிய திட்டம்..!! தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!!