நம் அன்றாட வாழ்வில் இரண்டரக் கலந்த ஒன்றாகிவிட்டது செல்போன். நெருங்கியவர்களோடான வாட்ஸ்அப் உரையாடல் தொடங்கி, செய்திகளை நொடிக்கு நொடி வழங்குவது, வங்கியில் பணப் பரிவர்த்தனை… என அனைத்துக்கும் ஆதாரமாகிவிட்டது இந்தக் கையடக்கக் கருவி. செல்போனைப் பயன்படுத்தாதவர்கள் மிக மிகக் குறைவு. ஆனால், இது தரும் ஆபத்தும் அளவிலாதது.

ஸ்மார்ட்போன் உபயோகப்படுத்துவோரின் எண்ணிக்கையும், அழைப்புகளின்போது பேசும் கால அளவும் பன்மடங்காக அதிகரித்துள்ளது. பொதுவாகவே, அழைப்புகளின்போது, ரேடியோ ஃப்ரீக்வன்ஸி (Radio-Frequency) எனப்படும் கதிர்வீச்சு அதிர்வெண் வெளியாகும். இது, அதிகளவு பாதிப்பை ஏற்படுத்தும் காரணிகளில் முக்கியமான ஒன்று. செல்போனில் இருந்து வெளியாகும் மின் காந்தக் கதிர்வீச்சால் ஏற்படும் பாதிப்பு கொஞ்சநஞ்சம் அல்ல.

அதாவது செல்போன் மற்றும் செல்போன் டவரில் இருந்து வெளிவரும் மின்காந்த கதிர்வீச்சால் உடலுக்கு தீங்கு ஏற்படும் என்றும் குறிப்பாக புற்றுநோய் உண்டாவதற்கான வாய்ப்பு இருப்பதாக மக்கள் மத்தியில் நீண்டகாலமாக பேசப்படுகிறது. இதற்கு உலக சுகாதார அமைப்பு விளக்கம் அளித்துள்ளது. உலகெங்கிலும் இருந்து 1994 முதல் 2002 வரையில் பெறப்பட்ட 63 ஆராய்ச்சிகளை மதிப்பாய்வு செய்து உலக சுகாதார அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில் பத்து நாடுகளைச் சேர்ந்த 11 திறன்மிக்க ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

செல்போன்கள், தொலைக்காட்சி, குழந்தைகளுக்கான மானிட்டர்கள் மற்றும் ரேடார் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் கதிரியக்க அதிர்வெண்ணின் விளைவுகள் குறித்து மதிப்பாய்வு செய்யப்பட்டது. அதிகரித்து வரும் செல்போன் உபயோகத்திற்கும் மூளை புற்றுநோய் பாதிப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று உலக சுகாதார அமைப்பு ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவரின் செல்போன் பயன்பாட்டின் கால அளவு, மூளை புற்றுநோயுடன் தொடர்புடையதாக இல்லை என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். செல்போன்களில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சிலிருந்து தீங்கு ஏற்படுத்தும் விளைவுகள் இல்லை என்றாலும், தொடர் ஆராய்ச்சிகள் தேவை என்றும் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

Read more: தினமும் சைக்கிள் ஓட்டினால் மரணம் ஏற்படுவதை குறைக்கலாம்!. ஆராய்ச்சியில் வெளியான தகவல்!