தமிழகத்திலேயே மதுரை மாவட்டத்தில்தான் அதிக சாதிய வன்கொடுமைகள் அரங்கேறுவதாக ஆர்டிஐ அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே, அடுத்தடுத்து வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. தமிழகம் முழுவதும் 394 கிராமங்களில் தென்மாவட்டங்களில் மட்டும் 171 கிராமங்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் கேட்ட கேள்விக்கு போலீஸ் சமூகநீதி மனிதஉரிமை பிரிவு தெரிவித்துள்ளது. அந்தவகையில், தமிழ்நாட்டில் நடந்த சாதிய வன்கொடுமைகள் குறித்து மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கார்த்திக் என்பவர் காவல்துறையின் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவின் கீழ் ஆர்டிஐ மூலம் தகவல் பெற்றுள்ளார்.

அதன்படி, இந்தாண்டு மார்ச் வரை போலீஸ் சமூகநீதி மனித உரிமை பிரிவு அறிக்கைபடி, தமிழகத்தில் ஜாதிய வன்கொடுமைகள் அதிகம் கடைபிடிக்கப்படும் என அடையாளப்படுத்தப்பட்ட கிராமங்களின் எண்ணிக்கை 394.இதில் 45 கிராமங்களுடன் மதுரை முதலிடத்தில் உள்ளது. இரண்டாவதாக 29 கிராமங்களுடன் திருநெல்வேலி, 24 கிராமங்களுடன் திருச்சி 3வது இடம், 22 கிராமங்களுடன் தஞ்சாவூருக்கு 4வது இடம், 20 கிராமங்களுடன் தேனி 5வது இடத்தில் உள்ளது. சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் இப்பிரிவு சார்பில் விழிப்புணர்வு கூட்டம் நடத்தினாலும் குறிப்பாக மதுரை மாவட்டத்தில் 335 கூட்டங்கள் நடத்தினாலும் ஜாதிய வன்கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

பட்டியலின் கடைசியாக 38வது இடத்தில் கள்ளக்குறிச்சி மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் தலா ஒரே ஒரு கிராமம் மட்டும் கண்டறிப்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 13வது இடத்தில் உள்ள கோயமுத்தூர் மாவட்டத்தில் வெறும் 11 நகர மற்றும் கிராம பகுதிகளுக்கு மொத்தம் 534 விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

மதுரை, திருநெல்வேலி உட்பட தென் மாவட்டங்களில் கடந்த மூன்று ஆண்டுகளில் ஒப்பிடும்போது கடந்த 2023ம் ஆண்டு விழிப்புணர்வு கூட்டங்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும், சாதிய வன்கொடுமைகள் நடைபெறும் கிராமங்களில் மக்களிடையே சாதிய பாகுபாடுகளற்ற நல்லிணக்க கிராமங்களாக மாற்றமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறியமுடிகிறது.

Readmore: லட்டு உருட்டுவதைவிட இவர்கள் உருட்டியதுதான் பெரிய உருட்டு!. சீமான் விளாசல்!