அண்மைகாலமாக, நாம் தமிழர் கட்சியில் இருக்கும் முக்கிய மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகி வருவது தொடர்கதையாக உள்ளன. “குறிப்பாக, கட்சி தலைமையின் செயல்பாடுகள் சரியில்லை, பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை, தான் (சீமான்) செல்வது தான் சரி இல்லையென்றால் கட்சியை விட்டு போய் விடுங்கள்” போன்ற குற்றச்சாட்டுகள் அடுக்கடுக்காக நிர்வாகிகளால் முன்வைக்கப்படுகின்றன.

மேலும், விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை தனது கட்சியின் அடையாள முகமாக வைத்து செல்லும் இடம் எல்லாம் பல கதைகளை சுவாரசியமாக பேசி வந்தார். இந்த நிலையில் 10 நிமிடம் மட்டுமே தலைவர் பிரபாகரனை சீமான் பார்த்து பேசினார் என நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் போட்டு உடைத்துள்ள வீடியோ சமூக வலையதளத்தில் பேசு பொருளாகி உள்ளது.

அதாவது, உண்மையிலேயே சீமான் படம் எடுத்துக் கொண்டிருக்கிறார். ஒருவேளை படம் எடுக்க இலங்கைக்குப் போய் ஷூட்டிங் மட்டும் எடுத்துவிட்டு திரும்பி வந்திருந்தால் இத்தனை பேருக்கான ஒரு தமிழ்த் தேசியத் தலைவராக சீமான் நமக்குள் புகுத்தப்பட்டிருக்கமாட்டார். அங்கே போய் 10 நிமிட பேச்சு (பிரபாகரனுடன்).. இவ்வளவு பெரிய மாற்றத்துக்கு காரணமாக, அவரது அரசியலை நிலை பெறச் செய்யக் கூடிய மையப்புள்ளியாக இருந்தது என காளியம்மாள் பேசியிருந்தார்.

இதற்கு பதிலளித்து பேசிய சீமான், இங்கே பேசிய என் தங்கை கூட சொன்னாங்க (காளியம்மாள்).. நான் படம் எடுக்கப் போனதாகவே எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். படம் எடுக்கப் போனவர்கள் வேற.. படம் எடுக்கிற குழுவினரை பயன்படுத்திக் கொண்டு என்னை அழைத்துக் கொண்டு போனது வேற.. படம் அவர்கள் எடுத்தார்கள்.. அந்த விழாவை திரைப்பட இயக்குநர் என்ற முறையில் நான் தொடங்கி வைத்தேன்.. படம் நான் எடுக்கவில்லை. மற்றவர்கள் எல்லாம் நான் 8 நிமிடம் (பிரபாகரனுடன்) பேசியதாக சொல்லுகிறார்கள்.. தங்கை (காளியம்மாள்) கூடுதலாக 2 நிமிடம் சேர்த்து 10 நிமிடம் என்கிறார். என்ன நடந்தது என்பது எனக்கும் என் தலைவனுக்கும் தெரியும்…

இங்கே இருக்கிற பல போராளிகளுக்கும் தெரியும். அவர்கள் சொல்ல முடியாத நிலையில் இருப்பதால் எல்லோரும் ஆளுக்கு ஒன்றை சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். 10 நிமிடம் (பிரபாகரனுடன்) பேசியவனிடம்தான் நம்பி ஒப்படைக்கிறோம். அவனை நம்பி விட்டுட்டுப் போகிறோம் என சொல்வார்களா (விடுதலைப் புலிகள் இயக்கத்தின் இறுதி நாட்களில்) ? என சீமான் கேள்வி எழுப்பினார். இதனால் தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

Readmore: இனிப்பான நியூஸ்!. பொங்கலுக்கு ரூ.2000 வழங்கும் தமிழக அரசு!. இத்தனை இலவச பொருட்களா?