சேலத்தில் புதிய வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க லஞ்சம் வாங்கியதாக மின்வாரிய அலுவலரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம் மல்லமூப்பம்பட்டி மின்வாரிய அலுவலக வணிக ஆய்வாளராக மணி, போர்மேனாக ராதாகிருஷ்ணன் ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்தநிலையில், அப்பகுதியை சேர்ந்த நபர் ஒருவர், புதிய வீடு ஒன்று கட்டியுள்ளார். இதற்கு மின் இணைப்பு கொடுப்பதற்காக மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். ஆனால் மின் இணைப்பு கொடுக்க மின்வாரிய அலுவலக வணிக ஆய்வாளர் மணி 3000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.
இதையடுத்து, ஆய்வாளரிடம் பணம் தருவதாக அந்த நபர் கூறிவிட்டு சென்றுள்ளார். இருப்பினும் லஞ்சம் கொடுக்க விரும்பாத அந்த நபர் லஞ்சம் ஒழிப்பு துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, லஞ்சப் பணம் ரூ. 3,000 பெற்றபோது மணியை கையும் களவுமாக பிடித்து அதிகாரிகள் கைது செய்தனர். இதேபோல், ரூ.1,000 லஞ்சம் பெற்ற ஃபோர்மேன் ராதாகிருஷ்ணன் என்பவரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கைது செய்தனர்.