நீரிழிவு எனும் சுகர் நோய் இருப்பவர்கள் “சீனி” எனும் வெள்ளை சர்க்கரையில் இருந்து “நாட்டு சர்க்கரை” எனும் மஞ்சள் சர்க்கரைக்கு மாறி தற்போது சமீப காலமாக “கருப்பட்டி” எனும் கருப்புச் சர்க்கரையிடம் தஞ்சம் புகுந்திருப்பதை அறிய முடிகிறது. சர்க்கரை நோயாளிகளும், உடல் எடையை கட்டுக்கோப்பாக பராமரிக்க நினைக்கும் நபர்களும் பிரவுன் பிரட், பிரவுன் ரைஸ், பிரவுன் சுகர் என மாறுவது பொதுவானது.
நாட்டுச் சர்க்கரையில் இனிப்பு சுவை குறைவாக இருக்கும் எனக்கூறி ஒரு ஸ்பூன் வெள்ளை சர்க்கரை பயன்படுத்த வேண்டிய இடத்தில் 2 அல்லது 3 ஸ்பூன் நாட்டுச் சர்க்கரை போடுவார்கள் சிலர். இதெல்லாம் மிகவும் ஆபத்தானது என்கின்றனர் மருத்துவர்கள். ‘எல்லா வகை சர்க்கரையையும் அளவாகத்தான் எடுக்க வேண்டும்’ என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். நாட்டு சர்க்கரை டீ வாங்கி பருகினால் சர்க்கரை ஏறாது என்று நம்புகிறார்கள் சிலர். உண்மையில் அப்படி கிடையாது. எந்த ரூபத்தில் இனிப்பு சுவையை எடுத்தாலும் உங்கள் ரத்த சர்க்கரை அளவுகள் கூடும் என்பதே உண்மை.
பாலை குடிக்காமல் இருக்க முடியவில்லை என்கிற பட்சத்தில் ஒரு நாளைய ஒட்டுமொத்த பால் கொள்முதலை 200 மில்லி என்ற அளவில் நிர்ணயம் செய்து அதையும் ஒரே வேளையில் எடுப்பது சிறந்தது. பாலில் உள்ள இயற்கையான சர்க்கரையும் (lactose) நீரிழிவை கட்டுப்பாட்டுக்குள் வைக்க விடாது. அதிலும், அரைச்சீனி / கால் சீனி/ முக்கால் சீனி / ஒரு பிஞ்ச் சுகர் என்று போட்டு பருகினால் இன்னும் பிரச்சனைகள்தான் கூடும்.