கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தற்போது, அணையின் நீர்மட்டம் 107.69 அடியாக உள்ள நிலையில், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இதே நிலையில் நீடித்தால், நாளை மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட வாய்ப்பு இருக்கிறது. அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வருவாய்த்துறை மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் எடுத்து வருகின்றனர்.
அந்தவகையில், கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளதால், மேட்டூர் கிழக்கு கரை கால்வாயில் இருந்து பிரியும் கிளை கால்வாய்களில் முட்புதர்களாக காணப்படுகிறது. இதனால் தண்ணீர் கால்வாய்களில் தேங்கி, கரைகள் உடைய வாய்ப்புள்ளது. இது சம்பந்தமாக Idp7News-இல் செய்தி வெளியிடப்பட்டது. தற்போது இதன் எதிரொலியாக, பொன்னம்பாளையம் கிளை கால்வாய் தூர்வாரும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதனால், அப்பகுதி விவசாயிகள் தங்களது கோரிக்கையின் மீது உடனடி நடவடிக்கை எடுத்து பணியினை மேற்கொண்டு வரும் நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். மேலும், இதேபோல் அரசிராமணி கால்வாயில் இருக்கும் பிளாஸ்டிக் குப்பைகள் மற்றும் இதர கழிவுகளையும் உடனே அகற்ற வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.