அத்திக்கடவு – அவிநாசி திட்டம் நிறைவேற்றப்பட்டதற்கு, நன்றி தெரிவிக்கும் விதமாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அன்னூர் அருகே உள்ள கஞ்சப்பள்ளியில் இன்று விவசாய சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த பாராட்டு விழாவில் தொண்டர்கள், முன்னாள் அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர். இந்த பாராட்டு விழாவிற்கு எடப்பாடி பழனிசாமி காளைகள் பூட்டிய மாட்டு வண்டியில் வந்தார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், “மூன்று மாவட்ட விவசாயிகள் ஒன்று திரண்டிருக்கிற காட்சியை பார்க்க முடிகிறது. நான் ஒரு விவசாயி என்ற முறையில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். என் எண்ணமெல்லாம் விவசாயிகள் மீதுதான். இந்த நிகழ்ச்சிதான் என் உள்ளத்தின் மகிழ்ச்சியான நிகழ்ச்சி. நான் பிறந்த பிறவி பயனை அடைந்து விட்டேன். ஒரு விவிசாயி என்பதில் தொடங்கி முதலமைச்சராவேன் என கனவிலும் கூட நினைக்கவில்லை.
ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது இத்திட்டத்தை பற்றி பேசினேன். அவர்கள் என்னை அழைத்து ஆலோசனை நடத்தியபோதே, ஆஹா திட்டம் நிறைவேறி விடும் என நினைத்தேன். ஆனால் துரிதிஸ்டவசமாக அவர் மறைந்தார். உங்களின் அதிர்ஷ்டத்தால் நான் முதலமைச்சராக வந்துவிட்டேன். உத்தரவு போடும் இடத்துக்கு நான் வந்து விட்டதால் இத்திட்டம் எளிதாகி விட்டது. போராடிய விவசாயிகள் கனவை நனவாக்கிய அரசு அதிமுக அரசு. நான் எப்போதுமே இருக்கிறது சூழலுக்கு தக்கவாறு நடந்து கொள்கின்றவன். என்னை யாராலும் அடிமைப்படுத்த முடியாது. பணத்தாலோ, பொருளாலோ என்னை அடிமைப்படுத்த முடியாது. சிலபேர் திட்டத்தை கொண்டுவராமல் எந்த முயற்சியும் செய்யாமல், திறந்து வைத்தவர்களும் சிலர் இங்கே இருக்கிறார்கள் உழைத்தவர் விவசாயி, ஆனால் அனுபவிப்பவர் வேறு ஒருவர்.
விவசாயிகளுக்கு பயிர்கடன் தள்ளுபடி செய்தது அதிமுக. விவசாயிகளுக்கு எந்தெந்த விதங்களில் உதவி செய்யமுடியுமோ, அந்தந்த உதவிகளை அதிமுக அரசு செய்தது. காவிரி நதிநீர் பிரச்சனையை தீர்த்த ஒரே அரசு. ஸ்டாலின் துணை முதல்வராக இருந்தபோது மீத்தேன் திட்டத்தை கொண்டு வந்தார். அதிமுக ஆட்சியில் பாதுகாக்கப்பட்ட டெல்டா மண்டலமாக அறிவித்தோம். காவிரி ஆற்றில் இரு இடங்களில் தடுப்பணை கட்ட திட்டமிட்டோம். அதை இந்த அரசு கிடப்பில் போட்டுள்ளார்கள்.
இந்த ஆட்சியிலிருப்பவர்களும் அதிக தடு்ப்பணைகள் கட்டுவோம் என தேர்தல் அறிக்கையில் கூறினார்கள். இன்னும் கட்டியபாடில்லை. பாண்டியாறு, புன்னம்புழா திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற காரணத்தால் வேலுமணி, ஜெயராமன் உள்ள மூவரை கேரளாவிற்கு அனுப்பி கோரிக்க வைத்தோம். ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அப்படியே கிடப்பில் போட்டார்கள். நிச்சயம் ஆட்சி மாற்றம் நிகழும். உங்களது கோரிக்கை நிறைவேற்றப்படும். நடந்தாய்வாழி திட்டம் குடியரசு தலைவர் உரையில் இருந்தது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அப்படியே கிடப்பில் போடப்பட்டது என்று குற்றம்சாட்டினார்.