கணவன், மாமியார் அவமானப்படுத்தியதால், மனமுடைந்த 19 வயது இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் மலப்புரம் மாவட்டம் கொண்டோட்டி பகுதியை சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். அரசு கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு படித்து வந்த இவருக்கு, கடந்த ஆண்டு மே 27ம் தேதி அதே மாவட்டம் முரயூர் பகுதியை சேர்ந்த அப்துல் வாஹித் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. அதாவது திருமணம் நடைபெற்று 20 நாட்களிலேயே அபுதாபிக்கு அப்துல் பணிக்கு சென்றுள்ளார். இதையடுத்து, இளம்பெண் தனது மாமனார், மாமியார் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

திருமணம் ஆன நாளில் இருந்தே அவரது நிறம் மற்றும் இங்கிலீஷ் தெரியவில்லை என்ற காரணங்களை கூறி அவரது கணவர் மற்றும் மாமியாரால் பலமுறை துன்புறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மன உளச்சலில் இருந்த இளம்பெண், கல்லூரி படிப்பில் சரியாக கவனம் செலுத்தாமல் தனிமையிலேயே இருந்ததாகவும், பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் மன நலத்தை சரிசெய்ய இளம்பெண் கவுன்சிலிங் சென்றுள்ளார். அபுதாபியில் இருந்து வரும் அழைப்புகளின் போது கூட, அவர் அவளது நிறத்தைப் பற்றி தொடர்ந்து கிண்டல் செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தை மாமியாரிடம் தெரிவித்தபோது, ​​அவர் விவாகரத்து செய்ய பரிந்துரைத்ததாகவும் தெரிகிறது.

மேலும், கணவரின் தாய் ஒருபோதும் பிரச்சினையைத் தீர்க்க முயற்சிக்கவில்லை. 20 நாட்கள் தானே வாழ்ந்தாய், இந்த உறவில் நீ ஏன் நீடிக்கவேண்டும் என்று பேசி அவமானப்படுத்தியுள்ளார். இதனால் தனது வீட்டில் இருந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். விடிந்தப்பின் வெகு நேரமாகியும் இளம்பெண் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த உறவினர்கள், கதவை உடைத்து உள்ளே பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அப்போது தூக்கி தொங்கிய நிலையில் இளம்பெண்ணின் உடல் மீட்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், இளம்பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விவகாரம் தொடர்பாக கேரள மகளிர் ஆணையம் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Readmore: வாழப்பாடி அருகே பேய் விரட்டும் திருவிழா!. பெண்களை முறத்தால் அடித்து வழிபாடு!. காலங்கள் மாறினாலும் காணும் பொங்கலன்று நடைபெறும் வினோதம்!.