ஆளுநர் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்ததற்கு பதிலாக, அவர் தமிழ்நாட்டை விட்டு மொத்தமாக சென்று விடலாம் என்று சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சேலத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த சீமான், இந்த நாடு மொத்தமாகவே தமிழர்களுக்கு தான் சொந்தம். இந்த நிலப்பரப்பு முழுவதும் பரவி வாழ்ந்தவர்கள், தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள் தான் என அம்பேத்கர் கூறுகிறார். அவரவர் தாய்மொழிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். அதற்காக தான் மொழிவாரியாக தேசிய இனங்கள் பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது. முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தை தான் பாட வேண்டும். இதற்காக ஆளுநர் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்ததற்கு பதிலாக, அவர் தமிழ்நாட்டை விட்டு மொத்தமாக சென்று விடலாம் என்று விமர்சனம் செய்தார்.

இதேபோன்ற நடவடிக்கையை ஆளுநரால் கர்நாடகாவில் மேற்கொள்ள முடியுமா? என்று கேள்வி எழுப்பிய சீமான், தேசிய கீதத்தை இசைக்காமல் இருந்தால் அவமதிப்பு என்று கூறலாம். ஆனால், முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட பின்னர் தான், தேசிய கீதம் பாடப்பட வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு தான் அதிகாரம். இதை தான் மக்களாட்சி எனக் கூறுகிறோம் என்று குறிப்பிட்டார். அவர்களுக்கு இல்லாத அதிகாரம் நியமன உறுப்பினரான ஆளுநருக்கு எங்கிருந்து வந்தது? தமிழர்கள் வரிப்பணம் தான் ஆளுநருக்கு ஊதியமாக கொடுக்கப்படுகிறது. தமிழர்களின் பணம் வேண்டும்; தமிழ் வேண்டாமா? இதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். மேலும், எங்களுக்கு இருக்கும் மொழிப்பற்றை பாசிசமாக கூறுகின்றனர். தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படுவதில் என்ன பிரச்சனை இருக்கிறது?” என கேள்வி எழுப்பினார்.

சென்னை புத்தக திருவிழாவில் சீமான் பங்கேற்ற நிகழ்வில் புதுச்சேரி தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட விவகாரமும் அண்மையில் சர்ச்சையை உருவாக்கியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சீமான், நான் அதிகாரத்திற்கு வந்தால் பாரதிதாசன் எழுதிய பாடலை தமிழ்த்தாய் வாழ்த்தாக மாற்றுவேன். நான் கலந்து கொண்டது பொது நிகழ்வு. அரசு விழாவில் வேண்டுமானால் இந்த பாடலை பயன்படுத்தாமல் இருங்கள். நான் அந்த நிகழ்வில் அரசியலுடன் இலக்கியத்தையும் பேசினேன். ஆனால், அதற்கு அடுத்து நடந்த நிகழ்வில் தி.மு.க-வினர் அரசியல் மட்டும் தான் பேசினர். அவர்களுக்கு இருப்பது இரத்தம், எங்களுக்கு இருப்பது தக்காளி சட்னியா? நான் பேசியது தவறு என்றால் நீங்கள் பேசியது எப்படி சரி?. நான் பங்கேற்ற நிகழ்வில் தான், உண்மையான தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அதற்காக எனக்கு தான் நன்றி தெரிவிக்க வேண்டும்” என அவர் தெரிவித்தார்.

தமிழ்தேசம், தமிழ்தேசியம் என புத்தகத்தில் உள்ளது. தமிழ்தேசியத்தை முன்னெடுக்கும் மகன் இதைக்கூட பேசவில்லை என்றால், தமிழ்த்தாய் வாழ்த்து போட்டதில் என்ன தவறு இருக்கிறது? நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்? இப்படி நடக்கும் என்று தெரிந்து தான் அந்த நிகழ்ச்சி நடந்திருக்கிறது. இல்லை என்றால் என்னை ஏன் கூப்பிட்டு வெளியிட வேண்டும். நான் கைத்தடி வைத்திருக்கிறேனா? துப்பாக்கி வைத்திருக்கிறேனா. கைத்தடி வைத்திருக்கிறவன் தட்டி தட்டி நடக்கிறார். நான் துப்பாக்கி வைத்திருக்கிறவன். இரண்டு குண்டாவது வெடிக்கனும். எல்லோரும் அரசியல் பேசுறாங்கள். நான் பேசியது தான் பிரச்சனையா இருக்குது. நான் மன்னிப்பு கேட்கும் அளவுக்கு என்ன தவறு இருக்கிறது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Readmore: எத்தன பேர ஏமாத்துவ?. கள்ளக்காதலனுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு வேறொருவருடன் உல்லாசம்!. ஸ்கெட்ச் போட்டு சம்பவம் செய்த இளைஞர்!.