பொங்கலை முன்னிட்டு எடப்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் எருதாட்டத்திற்கு காளைகளை தயார் படுத்தும் பணியில் கிராமத்து இளைஞர்கள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.
ஆண்டு முழுவதும் உழைக்கும் காளைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தமிழகத்தில் மாட்டுப்பொங்கல் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. விவசாயத்தை பிரதானமாக கொண்ட சேலம் மாவட்டத்தில், எடப்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொங்கல் விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. மேலும், பொங்கல் பண்டிகையையொட்டி நடத்தப்படும் எருதாட்டம் பிரபலமானது. இதற்காக மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் காளைகளுக்கு இளைஞர்கள் தீவிர பயிற்சியளித்து வருகின்றனர்.
அதன்படி, வேம்பனேரி, அய்யனாரப்பன் கோவிலில் எருதாட்டம் நடத்தப்படும். இதேபோல் சித்தூர், வெள்ளாளபுரம், கவுண்டம்பட்டி உள்ளிட்டப் பகுதிகளிலும் எருதாட்டம் நடத்தப்படுவது வழக்கம். இதில் கலந்துகொள்வதற்காக கொங்கணாபுரம், எடப்பாடி, வேம்பனேரி, உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இளைஞர்கள் தங்களது காளைகளை பயிற்சி அளித்து வருகின்றனர். .தினமும் காளைகளுக்கு நடைப்பயிற்ச்சி, நீர் நிலைகளுக்கு அழைத்துச் சென்று நீச்சல் பயிற்சி அளிப்பது, கொம்பு குத்தும் பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகள் கொடுக்கப்படுகிறது. இதுகுறித்து காளை உரிமையாளர்கள் கூறுகையில், காளை வளர்ப்பதற்கு ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை செலவாகிறது. இப்பகுதி விவசாயிகள் குடும்ப கவுரவமாக பின்பற்றி வருகிறார்கள். காளைகளை தங்களது குலதெய்வமாக கருதி வளர்த்து வருவதாக கூறினர்.