தனது நண்பன் மற்றொரு நண்பனுடன் சேர்ந்து சரக்கு அடித்த ஆத்திரத்தில், கத்தியால் குத்தி கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆதியூர் பகுதியைச் சேர்ந்தவர் பெயிண்டர் ராமன் (வயது 26). இவரும் அதே பகுதியை சேர்ந்த ராகுல் (வயது 25) என்பவரும் சிறு வயதில் இருந்தே நண்பர்கள் என்று கூறப்படுகிறது. எப்போதுமே இருவரும் ஒன்றாக சுற்றி வருவது, ஒன்றாக மது அருந்துவது என ஜாலியாக இருந்துள்ளனர். இந்நிலையில், ராமன் நேற்று ராகுலுக்கு தெரியாமல் மற்றொரு நண்பனுடன் சேர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த ராகுல் கோபமடைந்து, ராமனிடம் என்னை விட்டுவிட்டு இங்கு வந்து எதற்காக குடிக்கிறாய் எனக்கூறி வாக்குவாதம் செய்துள்ளார். ஏன் நான் குடித்தால் என்ன..? என ராமன் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே கைகலப்பானது. உடன் இருந்த நண்பர் இருவரையும் சமாதானப்படுத்த முயற்சித்துள்ளார். இதனால் மேலும் ஆத்திரம் அடைந்த ராகுல், எனக்கும். ராமனுக்கும் இடையே நீ எதற்கு வருகிறாய் எனக்கேட்டு அவரிடமும் சண்டைக்கு சென்றுள்ளார் ராகுல்.
இதனால் மூவருக்கும் இடையே கைகலப்பானது. அப்போது ராமன், தன்னுடன் மது குடிக்க வந்த நண்பனுக்கு ஆதரவாக பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராகுல், தான் மறைத்து கொண்டு வந்திருந்த கத்தியை எடுத்து, உயிர் நண்பன் ராமனை குத்தியுள்ளார். பின்னர், அங்கிருந்து அவர் தப்பியோடிவிட்டார். இதையடுத்து, ரத்த வெள்ளத்தில் சரிந்த ராமனை, அவருடன் வந்த நண்பன் மற்றும் அங்கிருந்தவர்கள் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
பின்னர், மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் ராமன் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. பின்னர், இச்சம்பவம் குறித்து ஆதியூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய ராகுலை தேடி வருகின்றனர்.