டெல்லியில் சாலையில் நடந்து சென்ற சிறுமியிடம் பட்டப்பகலில் பொம்மை துப்பாக்கியை காட்டி மிரட்டி பணப்பையை பறித்துச்சென்ற இளைஞரின் பகீர் வீடியோ வைரலாகி வருகிறது.

டெல்லியின் சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு பெயர் பெற்றது பழைய ராஜேந்திர நகர் பகுதி. இங்குள்ள பயிற்சி மையத்தில் ஏராளமான மாணவர்கள் குடிமைப் பணிகளுக்கான தேர்வுக்காக பயிற்சி பெற்று வருகின்றனர். இந்தநிலையில், பட்டப்பகலில் சிறுமி ஒருவர் தனியாக நடந்து சென்றுள்ளார். இதனை நோட்டமிட்டுக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர், யாரும் இல்லாத இடத்தில் வைத்து அந்த சிறுமியிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளார். இதுதொடர்பாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், ஒருவர் பொம்மை துப்பாக்கியைக் கையில் வைத்துக்கொண்டு சிறுமியை மிரட்டுகிறார். சிறுமி அந்த அச்சத்தினால் சத்தம் போடாமல் இருக்கும் நிலையில், அந்த நபர் அவளிடம் பணத்தை கேட்டு மிரட்டுகிறார். இதையடுத்து சிறுமி பணப்பையிலிருந்து பணத்தை எடுத்து தர, அவற்றை வாங்கிய அந்த இளைஞர், சிறுமியின் பணப்பையையும் பறித்துவிட்டு ஓடுகிறார். இந்த சம்பவம் அனைத்தும் சிசிடிவி காட்சியில் தெளிவாக பதிவாகியுள்ளது.

மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நடந்த இந்த சம்பவத்தால், அவர்களிடையே பாதுகாப்பு குறித்த அச்சத்தை உருவாக்கியுள்ளது. இது போன்ற சம்பவங்களை தடுக்க போலீசாரின் நடவடிக்கைகள் வேண்டும் என்ற கோரிக்கை விடுத்துள்ளனர். வீடியோ வைரலானதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த 17 வயது கொள்ளையனை கைது செய்துள்ளனர். மேலும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும், சந்தேகத்திற்கிடமான நபர்கள் குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் வழங்கவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Readmore: சொத்து தகராறில் சித்தப்பாவை போட்டுத் தள்ளிய அண்ணன் மகன்..!! நள்ளிரவில் கேட்ட அலறல் சத்தம்..!! மேச்சேரியில் அதிர்ச்சி..!!