இந்தியாவில் HMPV Virus பாதிப்பு பதிவாகியிருக்கிறது. அதுவும் இரு சிறு குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டிருப்பது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.
HMPV வைரஸ் தாக்கம் சீனாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில் இந்தியாவின் கர்நாடகாவில் மொத்தம் 2 பச்சிளம் குழந்தைகளுக்கு HMPV தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) தகவல் தெரிவித்துள்ளது. பெங்களூரில் நிலவி வரும் கடும் குளிரால், சுவாசப் பிரச்சினையின் காரணமாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட 8 மாத ஆண் குழந்தைக்கு பரிசோதனை செய்து பார்த்ததில் இந்த மனித மெட்டாப்நியூமோவைரஸ் (HMPV) வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. அதை கர்நாடக மாநில சுகாதாரத்துறையும் உறுதி செய்திருக்கிறது. இதேபோல், 3 மாத பெண் குழந்தைக்கும் இந்த தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்தது.
அதாவது, பெங்களூரில் உள்ள பாப்டிஸ்ட் மருத்துவமனையில் 3 மாத பெண் குழந்தைக்கு HMPV தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால், அந்த குழந்தை இப்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஜன.3ம் தேதி அதே மருத்துவமனையில் 8 மாத ஆண் குழந்தைக்கு HMPV தொற்று கண்டறியப்பட்டது. தற்போது குழந்தை குணமடைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த குழந்தைகளோ அவர்களின் உறவினர்களோ யாரும் வெளிநாடுகளுக்கு பயணம் செய்யாத நிலையில் குழந்தைகளுக்கு எப்படி பரவியது என்று பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. இந்தநிலையில், பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், இதுகுறித்து அச்சமடைய வேண்டாம் என்று கர்நாடக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
சுவாசப் பிரச்சினைகளை மிகத் தீவிரமாகக் கண்காணிப்பதன் மூலமாகவும் இன்ஃப்ளூயன்ஸா உள்ளிட்டவற்றைக் கட்டுப்படுத்துவது, அதற்குரிய சிகிச்சைகளை துரிதப்படுத்துவது ஆகியவற்றின் மூலமாக இந்த மனித மெட்டாப்நியூமோவைரஸ் (HMPV) வைரஸ் தடுப்பு நடவடிக்கையை மிகத் தீவிரப்படுத்தி வருவதாக மத்திய சுகாதார துறை அமைச்சகம் குறிப்பிடுகிறது. அதற்கு உலக சுகாதார நிறுவனத்தின் அறிவிப்புகள் அனைத்தையும் முறையோடு கண்காணித்து அவற்றுக்கான தடுப்பு நடவடி்கைகளை மேற்கொண்டு வருகிறது.
HMPV வைரஸ் ஜலதோஷம் உள்ளிட்ட சுவாசம் தொடர்பான அறிகுறிகளை ஆரம்பமாகக் கொண்டிருக்கிறது. நோயெதிர்ப்பு அமைப்பு பலவீனமாக உடையவர்களை இது அதிகமாக பாதிக்கிறது. குழந்தைகளைின் மீது இந்த வைரஸின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக ஐந்து வயதுக்கும் குறைவாக உள்ள குழந்தைகளை இது மிக மோசமாக பாதித்து வருகிறது. இந்த HMPV வைரஸ் தொற்று பருவ காலங்களில் ஏற்படும் சுகாதாரப் பிரச்சினைகளில் ஏற்படும் மிக அடிப்படையான அறிகுறிகளையே வெளிப்படுத்துகிறது.