எடப்பாடி அருகே போலீசாரின் வாகன சோதனைக்கு பயந்து, எதிர்திசையில் வந்த நண்பர்கள் இருவரும் லாரி மோதி படுகாயமடைந்தனர்.

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே சின்னநாச்சியூர் பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் ஜெகதீஷ் (19). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த சேகர் என்பவரது மகன் விக்னேஷ் (19) ஆகியோரும் நண்பர்கள். இருவருமே லாரி பட்டறையில் பெயிண்டர்களாக வேலைபார்த்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று ஜெகதீஷ், விக்னேஷ் இருவரும் இருசக்கர வாகனத்தில் திருச்செங்கோடு சென்றுவிட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது, எடப்பாடியை அடுத்த வீரப்பம்பாளையம் புறவழிச்சாலை பிரிவு அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்ததாக தெரிகிறது. இதனால், அவர்கள் போலீசாரை கண்டதும் இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்த விக்னேஷ், எதிர்திசையில் வாகனங்கள் வரும் சாலையில் ஓட்டிச் சென்றார். அப்போது எதிரே சங்ககிரியை நோக்கி சென்ற டிப்பர் லாரி, இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் ஜெகதீஷ், விக்னேஷ் இருவருமே படுகாயமடைந்தனர்.

இதையடுத்து, அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த விபத்து குறித்து எடப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More : எடப்பாடி அருகே அதிர்ச்சி..!! அடுத்தடுத்து 3 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை..!! காவல்துறையினர் தீவிர விசாரணை..!!