அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் அத்தியாவசியப் பொருட்கள் உட்பட அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை ஓரிரு நாட்களில் தொடங்கவுள்ளது. ஆனால் இம்மாதம் தொடங்கியது முதலே தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்நிலையில், மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியும், அதேபோல் வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த ஒரு வாரத்திற்கு பரவலாக கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அதில், வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பருவமழைக்கு முன்பாகவே அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. முந்தைய ஆட்சியில் ஏற்பட்டது போல் மழை பாதிப்பு இம்முறை ஏற்படாது.

மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மழைக்காலத்தில் பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாடு முழுவதும் நீர்நிலைகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன என்று தெரிவித்துள்ளார்.

Readmore: 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது?. தேதியை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்..!!