இலங்கையில் கொட்டித்தீர்த்த கனமழையால் மாவடிப்பள்ளி பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 மாணவர்கள் சடலங்களாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.பெஞ்சல் புயலானது காரைக்கால்- மாமல்லபுரம் இடையே இன்று(நவ.30) மாலை அல்லது நாளை (டிச.1) கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை போல் இலங்கையிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. 25 மாவட்டங்களில் 24 மாவட்டங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மழை வெள்ளத்தால் 4,41,373 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மழை காரணமாக, இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் 38,594 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளர். அங்கு அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், நிந்தவூர் பிரதேசத்தின் மதுரசா பகுதியில் இருந்து கடந்த செவ்வாய்க்கிழமை மாலை சம்மாந்துறை பிரதேசத்தை நோக்கி 11 பேருடன் டிராக்டர் சென்றுக்கொண்டிருந்தது. அப்போது மாவடிப்பள்ளி சின்னப்பாலத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்தது. வெள்ளநீரில் மாணவர்கள் அடித்துச்செல்லப்பட்டனர். இதில் இதுவரை 6 மாணவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் 5 பேர் காப்பாற்றப்பட்டனர்.