சேலம் கிச்சிப்பாளையத்தில் வெளுத்து வாங்கிய கனமழையால் சாலைகளில் மழைநீர் தேங்கி கடைகளுக்குள் புகுந்ததால் வியாபாரிகள் கவலையடைந்தனர்.
‘டானா’ புயல், வட மேற்கு வங்கக் கடலில் தீவிர புயலாக மாறும். இந்த புயல், இன்று இரவு அல்லது நாளை அதிகாலை, ஒடிசா – மேற்கு வங்க கடற்கரை பகுதியில், பூரி – சாகர் தீவுகள் இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளது. புயல் கரையை கடக்கும் போது, அதிகபட்சமாக, மணிக்கு 120 கி.மீ., வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும்.
குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் ஒரு சில இடங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், இன்று இடி மின்னலுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்துார், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில், இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
அதன்படி, சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று காலையில் மழை பெய்தது. அந்தவகையில், சேலம் கிச்சிப்பாளையம் புரதான பகுதிகளில் காலை 10 மணி அளவில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், சாலைகளில் வெள்ள நீர் தேங்கியதையடுத்து, 50க்கும் மேற்பட்ட கடைகளுக்குள் புகுந்தது. மழைநீருடன் கழிவு நீரும் சேர்ந்து கலந்து கடைக்குள் புகுந்ததால் வியாபாரிகள் கவலையடைந்தனர். மேலும், இந்த நீரை அகற்றும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். ஒருபுறம் போக்குவரத்தை சீர் செய்தும், மறுபுறம் வெள்ள நீரை அப்புறப்படுத்தும் பணியிலும் ஈடுபட்டதால் மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
Readmore: குட் நியூஸ்..!! ரேஷன் கடைகள் ஞாயிற்றுக்கிழமையும் இயங்கும்!. அமைச்சர் பெரியகருப்பன் அறிவிப்பு!.