ஃபெஞ்சல் புயல் தொடர் கனமழை காரணமாக சேலம் மாவட்டத்திற்கு இன்று (டிசம்பர்.3) பள்ளி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஃபெஞ்சல் புயல் தமிழ்நாட்டின் 14 மாவட்டங்களில் வரலாறு காணாத பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. தொடக்கத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழை பெய்ததைத் தொடர்ந்து, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்தது.

டிசம்பர் 1 ஆம் தேதி ஃபெஞ்சல் புயல் கரையைக் கடந்தபோது, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் காற்றின் வேகம் மணிக்கு 90 கி.மீ வேகத்தைத் தொட்டதால், சாலைகள் மற்றும் மின் இணைப்புகள் கடுமையாக சேதமடைந்தன என்றும், தருமபுரி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், சேலம் உள்ளிட்ட உள்மாவட்டங்களில் கனமழை மற்றும் சேதம் ஏற்பட்டது.

சேலம் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, ஏற்காட்டில் கடந்த இரண்டு நாள்களில் 144.4 மில்லி மீட்டர், 238 மில்லி மீட்டர் என தொடர்ந்து கன மழை பெய்தது. இதனால் திடீர் நீர்வீழ்ச்சி ஏற்பட்டு ஆங்காங்கே சிற்றருவிகள் உருவாகின.

மலைப்பாதை வழியாக வழிந்தோடும் தண்ணீரும், தொடர் மழையும் ஒன்று சேர்ந்து ஏற்காடு மலைப்பாதையில் மண் அரிப்பை ஏற்படுத்தியதால் ஏற்காடு மலைப் பகுதிகளில் ஆங்காங்கே மண் சரிவுகள் ஏற்பட்டன. ஃபெஞ்சல் புயல் காரணமாக ஏற்கனவே நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், இன்றும் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Readmore: ஐயப்ப பக்தர்களே!. சபரிமலையில் வெளுத்து வாங்கும் கனமழை!. பம்பை ஆற்றில் இறங்க பக்தர்களுக்கு தடை விதிப்பு!.