பெஞ்சல் புயல் காரணமாக சேலம் மாவட்டத்தில் கன மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகள், ஏரிகளுக்கு நீர் வரும் கால்வாய்களில் வெள்ளம் பெருக்கெடுத்தது. மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஆறுகளில் தண்ணீர் இரு கரைகளையும் தொட்டபடி வெள்ளம் கரை புரண்டோடுகிறது.

அதன் தொடர்ச்சியாக சேர்வராயன் மலைத்தொடர்களில் கொட்டி தீர்த்த கன மழையால் சரபங்கா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சேர்வராயன் மலைத்தொடரில் இருந்து இறங்கும் தண்ணீர் டேனிஸ்பேட்டை, காடையாம்பட்டி, செம்மாண்டப்பட்டி, ஓமலூர், முத்துநாயக்கன்பட்டி, அணைமேடு பாப்பம்பாடி, சமுத்திரம், எடப்பாடி வழியாக சென்று காவிரியில் கலக்கிறது. கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையில் சரபங்கா நதி முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல்வேறு இடங்களில் கரைகள் உடைபட்டு விவசாய நிலங்களை சூழ்ந்தவாறு சென்றுக்கொண்டிருக்கிறது.

இதனால், மாவட்ட நிர்வாகம் சார்பில், அப்பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக, திங்கள்கிழமை மாலை வெள்ளாளபுரம் ஏரிக்கரைப் பகுதி குடியிருப்பு வாசிகளை நேரில் சந்தித்த எடப்பாடி வட்டாட்சியர் வைத்தியலிங்கம், அப்பகுதி மக்கள், குடியிருப்பு வாசிகள், விவசாயிகள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் கால்நடைகளை கரையோரங்களில் மேய்ச்சலுக்கு விடவோ, ஆற்றில் மீன்பிடித்தல், துணி துவைத்தல், உள்ளிட்ட செயல்களில் ஈடபடவேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், சரபங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், வெள்ளாளபுரம் ஏரி தனது முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது. இதனால், வருவாய்த் துறையினர், அப்பகுதியில் முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர்.

Readmore: உஷார்..!! புதிய டிராக்டர் வாங்கினால் 50% மானியம்..!! இப்படியும் உங்களை ஏமாத்துவாங்க..!! மோசடியில் இருந்து தப்பிப்பது எப்படி..?